Saturday, December 27, 2014

கயல் (2014 - தமிழ்)


படத்தில்  இரண்டே வகையான கேரக்டர்கள். ஒன்று நல்லவர்கள். இரண்டு மிக மிக நல்லவர்கள். இந்த மாதிரி கேரக்டர்களை முன்பு விக்ரமன் படங்களில் பார்க்கலாம். இப்போது பிரபு சலோமன். அந்த மாதிரி கயல் படத்திலும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மேற்கண்ட இரண்டு வகைகளிலே இருக்கிறார்கள். காலம் காலமாக தமிழ் சினிமாக்களில் வில்லன்களாகவே சித்தரிக்கப்படும் லாரி டிரைவரை நல்லவனாக சித்தரித்து அந்த சம்பிரதாயத்தை கட்டுடைத்து இருக்கிறார்.
படம் முதல் பாதியில் நன்றாய் தான் செல்கிறது. கதையும் அது பயணிக்கும் களனும் கதாபாத்திரங்களும்.. மிக மிக எதார்த்தமாய் தான் காட்சிகள் நகர்கிறது. நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புத்தம் புது முகங்கள். ஏனோ தெரியவில்லை, எங்கே எங்கேயாவது குபீரென தம்பி ராமையா வந்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
ஆறு மாசம் சம்பாதிங்க….ஆறு மாசம் அதை ஜாலியா செலவு பண்ணுங்க…. அதுவும் ஊர் ஊராய் சுற்றி… மாதிரி மெசேஜ் சொல்கிறார்கள். கேக்குறதுக்கே செம சூப்பரா இருக்குல்ல. ஹீரோவும் அவரின் நண்பரும் அந்த மாதிரி தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சுற்றும் போது ஒரு ஊரில் ஓடிப் போகும் காதலர்களுக்கு எதேச்சையாக உதவி செய்ய நேரிடுகிறது.. ஓடி போனவர்களின் நண்பர்கள் இவர்கள் என நினைத்து… பிடித்து வைத்து அடித்து உதைத்து விசாரிக்கிறார்கள்… ஓடி போன பெண்ணின் ஊர் பெரிய மனிதரின் வீட்டில். அங்கு வேலை செய்யும் பெண்ணாக கயலை சந்திக்கிறான் நாயகன். கண்டவுடன் காதல் கொள்கிறான். “உள்ள பூந்து கொடாயுது” என்றெல்லாம் வசனம் பேசுகிறார். ஹீரோ பேசிய காதல் வசனங்களை வீட்டில் வேலை பார்க்கும் மற்ற இரு ஜோடிகளை.. ஹீரோ பேசிய அதே வசனங்களை பேச வைத்து அதை காமெடியாகவும் சீரியஸ் ஆகவும் உருவாகப்படுத்துவதில் இயக்குனர் நிற்கிறார். அந்த மாதிரி ஆங்கங்கே சிற்சில கதாப்பாத்திரங்கள் காமெடி செய்து நம்மை ரிலாக்ஸ் செய்து படத்தை ரசிக்க செய்து விடுகிறார்கள்.
இடைவேளையின் போது இணையதள விமர்சகர்களை குறித்து ஆழ்ந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. சினிமாக் காரங்க சொல்ற மாதிரி இஷ்டத்துக்கு விமர்சனத்த அவுத்து விட்டு நாஸ்தி பண்றாங்களோ என்று… ஒரு ஸ்டிக் ஐசை வாங்கி சப்பியபடி இரண்டாம் பாதியை எதிர் நோக்கி உட்கார்ந்தேன்.
அவ்ளோ தாங்க.. மேலே சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை. ஹீரோயின் ஹீரோவை தேடிப் போறாங்க… ஹீரோ ஹீரோயினை தேடிப் போகிறார்…. கிளைமாசில பாத்துகுறாங்க. சுனாமி வருது… பிரியுறாங்க..அப்புறமா சேர்ந்துறாங்க.. நாலு வரியில முடிஞ்சு போச்சுல்ல. ஆனா அதை அப்படி இழுத்துருக்காங்க ஒரு மணி நேரத்துக்கும் மேலாக. அப்படித்தான் படம் தொங்கலாகி போய் விடுகிறது.
ஆனா படத்துல மூணு அருமையான மெலடி பாட்டு இருக்குங்க…
படத்தில் நெருடிய ஒரு விஷயம்… இயக்குனர் அவர் மதம் சார்ந்த அடையாளங்களை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். இட்ஸ் ஓகே படத்தின் ஹீரோ அந்த மதத்தை சேர்ந்தவர் அதனால் என்று விட்டு விடலாம். ஆனால் போன படத்தின் (கும்கி) வெற்றி விழாவின் போதே
அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். பொது வெளியில் இயங்குபவர்கள் அவ்வாறு இருப்பதை தவிர்க்கலாம்.

Friday, December 26, 2014

ஹேமா சின்ஹா



ஹேமா சின்ஹா என்னும் இந்த புள்ளையத்தான் நேற்று மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் யாரோ அசிங்கப்படுத்தியதாக அறிகிறேன். விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவரின் தமிழ் பேசும் உச்சரிப்பை கண்டு அவர் கொதிப்படைந்து “பேசுனது போதும், வேற யாரையாவது பேச சொல்” என்று கத்தியிருக்கிராராம். யார் அவர் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஜோல்னா பை வைத்திருப்பவராகவும், அடர்த்தியான தாடியுடன், தடிமனான கண்ணாடி அணிந்தவராகவும் இருக்கக் கூடும். (கற்றது தமிழ் ஜீவா இல்லை இல்லை கற்றது தமிழ் ராம் ஞாபகத்துக்கு வர்றாங்கல்ல…)
ஒரு காலத்தில் சன் மியூசிக்கில் காம்பயரிங் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெண்கள் அல்ல. தேவதைகள். அப்படியாப்பட்ட தேவதை சந்ததியரின் கடைசி தலைமுறையை சேர்ந்தவர் தான் இந்த ஹேமா சின்ஹா.
பக்க பக்கமாய் இலக்கியம் படித்தது இருக்கட்டும். உனக்கு கொடுத்து அனுப்பிச்ச இன்விடேஷனை ஒழுங்கா படிச்சியா? சின்ஹா பெயரை பார்க்கும் போதே தெரிய வேணா…இந்தளவிற்கு தமிழ் பேசுவதே பெரிய விஷயம். வாசிப்பு எதை எதையோ கற்றுக் கொடுக்கும் என்கிறார்களே. உனக்கு அது ஒரு அடிப்படை நாகரிகத்தை, கொஞ்சூண்டு சகிப்புத் தன்மையுமா கற்றுக் கொடுக்கவில்லை.
பாவம் அந்தப் பெண், கண் கலங்கியவாறு விழா முடியும் வரை பின்னாலேயே நின்று கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் எப்படி இருந்திருக்கும் அவரின் மனநிலை.
இந்த மாதிரி தான் சமீபத்தில் கோவாவில் நடந்த பட விழாவில் DD சேனலை சேர்ந்த ஒரு பெண் காம்பியர் தப்பாய் ஒருவரின் பெயரை ரேப்ரசென்ட் பண்ணி விட்டார். அவரை சோசியல் மீடியாவில் ஒட்டு ஓட்டுவென ஒட்டியிருக்கிறார்கள். நாம் லிங்குவை ஒட்டின மாதிரி. அவர் தற்கொலை செய்யும் மனநிலை வரை சென்று விட்டாராம்.
இதெல்லாம் பாவம் மை சன்ஸ் !

Monday, October 27, 2014

கத்தி - விமர்சனம்

கத்தி படத்தை விமர்சிப்பதற்கு முன் அதன் இயக்குனர் திரு முருகதாஸ் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று கோடிகளில் புரளுவதாக சொல்லப்படும் இவர், மிக சாதாரண குடும்ப பின்னணியில், திருச்சி அருகே துவரங்குருச்சி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். திருச்சியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு பஸ்ஸோ ரயிலோ ஏறியவர். பள்ளி காலங்களிலேயே எழுத்தார்வம் இருந்து, சின்ன சின்ன நகைச்சுவை துணுக்குகள், சிறுகதைகள் எழுதி பத்திரிக்கைகளில் வெளிவந்ததன் ஆர்வம் சினிமாவில் சேரத் தூண்டி சென்னைக்கு அனுப்பியிருக்கிறது. இவருக்கு முழு ஆதரவாய் இருந்தவர் இவரின் அப்பா. ஊரில் சிறிய பாத்திர கடையை நடத்தியவர். சென்னையில் முருகதாஸ் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அவரை தளரவிடாமல் செலவிற்கு மாதா மாதம் பணமும் அனுப்பி ஆதரித்தவர். கூட பிறந்த மூன்று அக்காக்கள், மற்றும் இரண்டு தம்பிகளுக்கும் சேர்த்து மாதம் 500 ரூபாய் செலவழிக்கிறார் என்றால் முருதாசிற்கு மட்டுமே மாதம் 400 ரூபாய் அனுப்புவாராம்.
எப்படியோ கஷ்டப்பட்டு பிரபல கதை, திரைக்கதை, வசனகர்த்தாவான P கலைமணியிடம் உதவியாளராய் சேர்ந்திருக்கிறார். நோட்ஸ் எடுக்கும் வேலை மட்டுமல்லாமல்,. கதை டிஸ்கஷனிற்கு வரும் பெரிய பெரிய இயக்குனர்களுக்கு, உற்சாகப் பானங்களை பரிமாறும் வேலையும். இங்கு தான் ஒரு கமெர்சியல் சினிமாவிற்குண்டான  அத்தனை வித்தைகளையும் கற்று கொண்டதாக சொல்கிறார்.
பின்னாளில் உதவி இயக்குனராய் வளர்ந்து S J சூர்யா மூலம் அஜித்திற்க அறிமுகப்படுத்தப்பட்டு ‘தினா’ இயக்கி, அண்ட தி ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி.
இந்த கதையை எதற்கு சொல்கிறேன் என்றால் கிராமம், விவசாயம், கஷ்டம் என்று அடித்தட்டிலிருந்து வந்த மனிதன் தான் இயக்குனர் என்பதை பதிய.
*****
துப்பாக்கிற்கு முன்னால் முருகதாஸ் கத்தி கதையை விஜயிற்கு சொல்லியிருந்தால், விஜய் அவருக்கு கத்தி படம் பண்ணியிருப்பாரா எனபது சந்தேகம் தான். இப்போது பண்ணியிருக்கிறார் என்றால் அது முழுக்க முழுக்க முருகதாசை நம்பி மட்டுமே.
விவசாயம், விவசாயி என்று படம் முழுக்க பேசுகிறார்கள். கொஞ்சம் விட்டாலும் மெலோ டிராமாவாய் கிளிஷே காட்சிகளாலாலும் நிரம்பி வழியக் கூடிய கதை களம். மீறி நிற்கிறது என்றால் அது விஜய் என்கின்ற மாஸ் ஹீரோவாலும் போரடிக்காமல் காட்சியகப்படுத்திய இயக்குநராலும் தான்.  வேறு எந்த ‘மூத்த குடி’யாலும் பண்ணியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
நாட்டின் தற்போதைய விவசாயத் துறையின் நிலைமை பற்றிய மிக மிக அடிப்படை அறிவு இருந்தாலே போதும் இந்த படத்தை பாராட்ட, மட்டுமல்லாமல் ரசிக்கத்தான் சமந்தா, சதீஷ், செல்பி  பாடல்கள் இருக்கிறதே. போதாதா. Its a Shit Movie – என்று விமர்சித்திருந்தார்கள். அந்த Shit-ம் விவசாயத்திற்கு பயன்படக் கூடிய ஒன்று தானே என்று தான் நினைவிற்கு வருகிறதே  தவிர அவர்கள் மீது கோபம் வரவில்லை.
மிகசமீபத்தில் M R ராதா அவர்களின் ஒரு சிறு ஒளி துணுக்கை பகிர்வில் காணக்கிடைத்தது. அதில் ராதா,  “ஏண்டா, இப்ப நாட்ல நல்லது சொல்றதுக்கே ஆள் இல்லாம போய்கிட்டிருக்கு, சொல்றவனை பிடிச்சு, “நீ, என்ன பெரிய ஒழுங்கான்னு கேக்குறீங்க..”. “சொல்ற விஷயம் நல்லா விஷயமா, ஏத்துக்கலாமான்னு மட்டும் பாருங்கடா.. அவன் நல்லவனா, கெட்டவனான்னு ஆராய்ச்சி  பண்ணாதீங்கடா”  – என்கிறார். அது அப்போதைக்கு அவர் மீதான விமர்சனத்தையும் படத்தில் அவர் சொல்கிற கருத்தையும் ஒப்பிட்டு எதிர்ப்பவர்களுக்காக வைக்கப்பட்ட காட்சி போல. இன்றைக்கும்,  இன்றைக்கும் என்ன என்றைக்கும் அது பொருந்தும்.
நேற்றைய காஃபி வித் டிடி யில் முருகதாஸ் சொல்கிறார், கேமரா டிஸ்டன்சை கிரகித்து அதற்கேத்த ஆக்ஷன் மட்டுமே கொடுப்பார் – விஜய் என்று. மேலும் ஒரு குறிப்பிட்ட காட்சியை,  சுற்றி எட்டு கேமரா வைத்து எடுத்தாலும் அந்த எட்டு காமேராவிலும் ஒரே மாதிரியான பாடி லாங்குவேஜ் தான் பதிவாயிருக்கும். சிலருக்கு கை பொசிஷனோ, தலை பொசிஷனோ மாறி விடும். இதை விட ஒரு நடிகருக்கு என்ன பாராட்டு வேண்டும் ஒரு பெரும் இயக்குனரிடமிருந்து. (எப்படி மாறும்…?  நடிச்சா  தானே மாறும் – என்று கம்மென்டில் வந்தால் – சிவாஜி ரத்தம் கக்குற போட்டோ  பரிசளிக்கப்படும்.) :-)
முருகு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் அப்பாவின் டெத் செர்டிஃ பிகேட் வாங்குதற்கு போயிருந்தாராம். (முதல் படம் ரிலீஸ் முன்பே அப்பா இறந்திருக்கிறார்) அங்குள்ள பியூன் லஞ்சம் எதிர்ப்பார்த்திருக்கிறார். இவர் “ஏங்க, இதை வச்சு நான் வேலையா வாங்க போறேன்”. என்று சண்டையிட்டு பார்த்திருக்கிறார். “வேணும்னா காசு கொடு, இல்லாட்டி பத்து நாள் கழிச்சி வா” என்றிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் காசு கொடுத்து வாங்கியிருக்கிறார். அப்போ என்னால பண்ண முடியாதத நான் பண்ணனும் நினச்சத இப்போ என்னோட ஹீரோக்களை வைத்து பண்ணுகிறேன்” – என்கிறார். யதார்த்தத்தை யதார்த்த சினிமாக்களை விடுங்கள். தான் பண்ண முடியாததை ஒரு ஹீரோ திரையில் பண்ணுவதை பார்த்து ரசிகன் புளகாங்கிதம் அடைவது தானே சினிமா !
 கார்ப்ரேட் நிறுவனங்களை நேர் மறையாய் தாக்கும் கதையை ஒரு கார்ப்ரேட் நிறுவனமே தயாரிக்க முன் வருகிறது என்றால் அது முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கையால் தானே. இந்தாளு எப்படியும் சம்பாதிச்சு கொடுத்துருவான் என்பதால் தானே. படம் சொல்ல வந்த கருத்தை லைக்கா என்ன, கோத்த பய ராஜ பக்க்ஷ தயாரித்தால் கூட ஏற்று கொள்ளலாம் தான்.
இடைவேளையில் என்னுடைய பிரத்யோக விருப்பமான பவோண்டோவை தேடினேன். கிடைக்கலை. ஒரு வேளை அவர்கள் மார்க்கெடிங்கை இன்னும் விஸ்தாரப்படுத்தினால் கிடைக்கலாம். இங்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த உள்ளூர் சரக்கு தயாரிக்கவும் பெப்சி, கோக் தயாரிக்க உபயோகிக்கப்படும் அதே அளவு தண்ணீர் தானே தேவைப்படும் ?அப்படியென்றால் அவர்களை மட்டுமல்ல இவர்களையும் தானே எதிர்க்க வேண்டும்.
 படம் ‘விவசாயிகளுக்கு சமர்ப்பணம்’ என்று கார்டு போட்டு முடித்தார்கள். திருப்தியாய் ஒரு படம் பார்த்து முடித்த ஒரு உணர்வு. மனதிற்குள்ளேயே கை தட்டி கொண்டேன். ஒரு வேளை தரை டிக்கெட்டில் இருந்திருந்தால் சத்தமாய் தட்டியிருப்பேனோ என்னவோ….

Saturday, October 18, 2014

வரும்…,ஆனா வராது…..


தமிழ் ஹிந்து வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஊர் ஊராய் சென்று வாசகர்களுடன், பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார்கள். மெச்சத் தகுந்த நல்ல பல கட்டுரைகளுடன் ஒரு மதிப்பான செய்தி செய்தித்தாளாய் உருமாறி வருகிறது என்றே சொல்லலாம். நிற்க.
மூன்று மாதத்திற்கு முன் நானும் ஆறு மாத சந்தா கட்டி அதில் ஐக்கியமானேன். மூன்று மாதம் வரை ஒழுங்காய் தான் விநியோகித்து வந்தார்கள். கடந்த மூன்று நாட்களாய் பேப்பர் வருவதில்லை. காரணம் கேட்டதற்கு “நீங்கள் மூன்று மாத சந்தா தான் கட்டியிருப்பீர்கள், அதனால் நிப்பாட்டி இருப்பார்கள்” என்றார் லோக்கல் பாயிண்ட் டெலிவரி ஏஜென்ட். உடனே தமிழ் ஹிந்து அலுவலகத்திற்கு தகவல் கொண்டு விசாரித்ததில், “இல்லை உங்களுக்கு ஆறு மாதம் வரை டெலிவரி உண்டு, நீங்கள் லோக்கல் விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளுங்கள்” என்று (டேக் டைவெர்சன்) திருப்பி விட்டார்கள். தமிழ் ஹிந்து அலுவலகத்தில் இந்த பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவு எளிதாய் கிடைத்து விடவில்லை. அரை நாள் ஆகி விட்டது. ஒன்று லைனே கிடைக்காது. லைன் கிடைத்தால் ஹோல்டில் போடுவார்கள், பின்பு ட்ரான்ஸ்பர் செய்கிறேன் என்று சுத்தலில் விடுவார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்து, நாமே தொடர்பை துண்டிக்க வைக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு Management ட்ரைனிங்கில் சொல்லியிருப்பார்கள் போல. ஆச்சா…
இப்போது லோக்கல் விநியோகஸ்தர் முறை. அவருக்கு கால் செய்தால் “கண்ணா, பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..” என்று அவரின் ரிங் டோனை எனக்கு மனனம் செய்ய வைத்தாரே தவிர போன் எடுக்கப்படவேயில்லை. “பேப்பர் இன்னைக்கு வரும், நாளைக்கு வராது” என்பதன் குறியீடு போல அது.
அடுத்த என்ன.., மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தேன். காசோலை வாங்கி கொண்டு போன ஹிந்து பிரதிநிதி, பிறகு லோக்கல் பாயிண்ட் டெலிவரி ஏஜென்ட், மறுபடியும் ஹிந்து அலுவலகம் என்று காலை டிபன் சாப்பிட்டு உட்கார்ந்தால் மதியம் சாப்பாட்டிற்கு தான் எழுந்திருக்க முடியும்.
இன்று மூன்றாம் நாள், கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டு, நானும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, ஒரு மாதிரி மன உளச்சலை உண்டாக்கி கத்த விட்டு விட்டார்கள். ஆனால் அவர்களில் யாருமே டென்ஷனே ஆகவில்லை. காதில் போட்டால் தானே, இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவது.
எப்போதும் போல இன்றைக்கும் சொல்லியிருக்கிறார்கள், “நாளைக்கு டெலிவரி ஆகிவிடும், ஐயா”. என்று.
இதனால் உளவியல் ரீதியாக எவ்வளவு பதற்றத்தை உண்டாக்குகிறார்கள் பாருங்கள். என்னிடம் பேசிய இத்தனை பேர்களில் யாரிடமுமே உணர்வு என்பதே இல்லையோ என்றே ஐயம் வருகிறது, இல்லை அவைகள் மரக்கடிக்கப்பட்டு விட்டவனைகளா..
ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டன். இதில் ‘மக்கள் குரல்’ என்று ஒரு பகுதி வருகிறது. ஊரில் உள்ள பிரச்சனைகளை நாம் தொலைபேசியில் பதிந்தால், அதற்குண்டான நடவடிக்கை உடனடியாய் எடுக்கப்பட்டு, தீர்வு கிடைத்தவுடன் பெருமையாய் பதிவார்கள்.

Tuesday, October 14, 2014

இளையராஜாவின் பதில் கடிதம்

1978 லேயே இளையராஜாவிடம் ஓரண்டை இழுத்திருக்கிறார் ஒரு ரசிகர். அப்போது ராஜா கைப்பட எழுதிய கடிதம். தரவிறக்கி ஜூம் செய்தால் தெளிவாய் படிக்கலாம். பிரபலங்கள் என்றாலே இப்படியாகப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து, கடந்து வந்து தான் பக்குவப்பட வேண்டியிருக்கும் போல.

Monday, October 13, 2014

அதிதி 2014 (தமிழ்)



இந்த மாதிரி நாலு படம் தொடர்ச்சியாய் பாத்தோம்னா நாமளும் ரொம்ப நல்லவங்களாக மாறிவிடுவோம்.
அதிதி படத்தை  பற்றித்தான்  சொல்கிறேன். “என்னது காந்தி செத்துட்டாரா?” என்று கேட்காமல் படியுங்களேன். மலையாளத்தின் “Cocktail” படத்தை கிரெடிட் கொடுத்து தழுவி எடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் கிரெடிட் கொடுக்காமல் எடுத்திருந்தார்களாம் அதாகப்பட்டது “Butterfly on Wheel” (ஆங்கில படமோ / கனடா படமோ தெரியவில்லை) என்ற படம் தான் மூலம். ஆனால் அந்த மூலத்தின் மூலமே ஒரு கொரியன் படம் என்கிறார்கள். அதனால் யாருக்கு கிரெடிட் கொடுப்பது என்ற குழப்பம் வந்திருக்கலாம். ஆக எல்லோருக்குமே தலகாவேரி கொரியன் படங்கள் தான் போல.
இடையில் ஒரு விஷயத்தை பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து ஒரு வருடம் ஓடிய லத்திகா படத்தின் Tag லைன் “Butter on Wheel”. சோ, பவர் ஸ்டாரும் உலக படங்களை உன்னிப்பாய் பார்க்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது.
அதிதி படம், கடைசி பத்து பதினைந்து நிமிடங்கள் மட்டும் தான் நம்மை ஊகிக்க முடியாத தருணத்தில் ஆழ்த்தி திடுக்கிட வைத்து ,மெசேஜ் சொல்லும் ஒரு பா(ப)டமாய் அமைகிறது. அது வரை கொஞ்சம் சோதனை தான். சுருக்கமாய் சொன்னால் பட முடிவில் நாம் வில்லன் என் நினைப்பவர் தான் ஹீரோ, ஹீரோ என்று நினைப்பவர் தான் வில்லன். எப்படி…?
மலையாளத்தில் வில்லன் போன்று நடித்திருப்பவர் ‘ஜெயசூர்யா’, அறிமுகமானவர். பெர்ஃபான்ஸ் கொடுப்பவர். அம்மாதிரி ஒரு நடிகரை வைத்து தமிழிலும் முயற்சித்திருக்கலாம். இங்கு எவரோ புதுமுகம். எடுபடவில்லை. பார்ப்பதற்கு கற்றது தமிழ் ராம் போல் வேறு இருக்கிறார்.
இப்போது நீங்கள் படத்தை பார்க்க நினைத்து டொரண்டில் போட்டால் கூட சீட் (seed) பண்ணுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்ற தகிரியத்தில் கதையை சொல்லி விடுகிறேன்.
தன் பெண் குழந்தை மீது உயிராய் இருக்கும் காதலித்து மணம் முடித்த ஹீரோ ஒரு கட்டுமான நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவன். அவனால் நிறுவனத்தில் பணிபுரியும் தவறானவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதை தொடர்ந்து ஹீரோவின் குழந்தை வீட்டிலேயே சிறை வைத்து கடத்தப்படுகிறது, தம்பதியர் காரில் பயணம் போகும் சமயத்தில் லிப்ட் கேட்டு ஏறும் வில்லனால்.
தொடர்ந்து ஒவ்வொரு காரியமாய் செய்ய பணிக்கிறான் வில்லன். ஏன் எதற்கு என்று ஹீரோவிற்கும் தெரிவதில்லை. நமக்கும். இதன் நீளம் ஜாஸ்தி என்பதால் பொறுமை என்பது யாதனில் பற்றிய சிந்தனை எல்லாம் நமக்கு வருகிறது. காசு கொடுத்து பார்க்கிற சாதாரண காமன் மேன்ற்கு அது வருமா? இல்லை அவனுக்கு அது தேவையா ?
முடிவில் தான் தெரிய வருகிறது, பிளான் செய்ததே ஹீரோவின் மனைவியும், வில்லனும் தான் என்று.
ஹீரோவும், வில்லனில் மனைவியும்  ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். கசமுசாவில் இருப்பவர்கள். வில்லன் மெத்த படித்தவர்.  மனைவியை சரியாய் கவனிக்க முடியாமல் அல்லது மனைவியே அவ்வாறு நினைத்து அலுவலகத்தில் பணிபுரியும், ஆறுதலாய் பேசும் ஆடவன் (ஹீரோ) மீது ஈர்ப்பு கொள்கிறாள். என்ன தான் நல்லவனாய் இருந்தாலும் வலிய வருவதை தவிர்க்க முடியாமல் உபயோகிக்கிறான், ஹீரோ. இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஹீரோவின் மனைவியும், வில்லனும் குழந்தையயை கடத்தி, நாடகம் ஆடி கணவனை திருத்துவதே கதை.
நல்ல படம்யா. முடிஞ்சா பாருங்க…. : -)

Tuesday, October 7, 2014

லிங்கு சாமியும் இயேசு தாசும் பின்னே ஃ பிளிப் கார்ட்டும்

சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக ஒரு விஷயத்திற்காக உடனுக்குடனடியாய் பொங்குவதும் பின் அதையே பிடித்து தொங்குவதும் அவசியம் இல்லாதது.
லிங்கு, ஜேசுதாஸ் தொடங்கி பிளிப்கார்ட் வரையில், எல்லா விஷயங்களிலும், படம் தொடங்கி பத்தே நிமிடத்தில் விமர்சனத்தை தட்டி விடுகிற மாதிரியான பரபரப்பு, படப்பிடிப்பெல்லாம் எதற்கு ?
லிங்கு மேட்டரை விடுங்கள். அவர் காமெடி பண்ணினார். அதனால் நாம் ஓட்டினோம். ஜாலியாய் சிரித்து அவ்விடயத்தை ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆக்கினோம்.

****

ஜேசுதாஸ் அவர்கள் லெக்கிங்க்ஸ் பற்றி பேசாமல் ஜீன்ஸ் பற்றி பேசும் போதே தெரிந்து கொள்ள வேண்டாமா, அவர் லண்டனில் வாழ்ந்தாலும் / வாழ்வதாலும் இங்குள்ள ட்ரெண்டிங்ற்கு இன்னும் அப்டேட் ஆகாமல் இருக்கிறார் என்று.

***


ஃபிளிப் கார்ட்டிற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இந்த தீபாவளி சீசனில் ரங்க நாதன் தெருவில் கூடும் ஒட்டு மொத்த கும்பலும் ஒரே நேரத்தில் ஒரே கடையில் நுழைந்தால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள். சரி நுழைந்து விட்டார்கள். நுழைந்த அனைவருமே ஒரு சில ஃஆபர் குறிப்பிட்ட பொருட்களின் மீதே கை வைத்தால் என்ன ஆகும் என்றும் திங்க் ட்வைஸ். கண்டிப்பாய் உயிர் சேதம் ஏற்படும் அல்லவா. அப்படி தான் நேற்று செத்து போயிருக்கிறது ஃபிளிப் கார்ட்டின் செர்வர்.
சோ, நடந்தது லாட்டரி சேல்ஸ் மாதிரி தான், பம்பர் அடித்தது ஒரு சிலருக்கு எனில் தேவுடு காத்து Sold Out/Out of Stock பாத்து பேஸ்தடித்தவர்கள் பல பேர். அவர்கள் வெளிப்படுத்திய உள்ளக்குமுறல்கள் தான் ஃபிளிப் கார்ட்ற்கு கிடைத்த மோசடி நிறுவனம் என்கின்ற பட்டம்.
இவர்கள் இதற்கு முன்னமே கூட கிட்டத்தட்ட இதே நடைமுறையில் ஃபிளாஷ் சேல்ஸ் என்று Motorola மற்றும் Xiaomi கம்பெனிகளின் மொபைல் போன்களை விற்றிருக்கிறார்கள். அதில் வாங்க முயற்சித்து..வாங்கியவர்கள், வாங்க முடியாதவர்கள் – அறிவார்கள். நேற்று என்ன நடந்திருக்கும் என்று. வெறும் நாலு செகண்டில் 30,000 போன்கள் விற்ற ரெகார்ட் இருக்கிறது.
பிளிப்கார்ட் பொறுத்தவரையில் அவர்கள் தவறுகளிடமிருந்தே நிறைய பாடங்களை கற்று வருகிறார்கள். அதற்கு நாம் என்ன பரிசோதனை எலிகளா என்று கோபம் வருவது நியாயம் தான். ஆனால் ஒரு உண்மையை ஒத்து கொண்டே ஆக வேண்டும். சாதாரண நாட்களில் மால்களில் கிடைக்கும் விலையை விட பிளிப்கார்ட் குறைவான விலைக்கே விற்றிருக்கின்றன, அதுவும் fast delivery, cash on delivery, 30 days cancel/return back போன்ற நல்ல பல சேவைகளுடன்.
ஆகவே தானத்திலே சிறந்த தானம் நிதானம் என்கின்ற பொதுமறை செய்தியுடன்……

Thursday, October 2, 2014

யான் கானா பாலா

வரும் படங்களில் எல்லாம் கானா பாலாவை பாட வைக்கும் உங்கள் பாழாய் போன சென்டிமென்ட் புரிகிறது. ஆனால் அதை காட்சியகப்படுத்தும் போதாவது கொஞ்சம் கவனம் செலுத்த கூடாதா.
இந்தி திரைப்படங்களில் வரும் பிரமாண்ட திருமண மண்டபம் போல இருக்கிறது பாடல் எடுக்கப்பட்ட பின்னணி களம். பற்றாதற்கு காவிக்கண்டு கனவான் (Chocolate
Boy Man) ஜீவாவிற்கு ஒரு சிறு துளியளவிற்கும் பொருந்தாத கானா பாலாவின் வாயசைப்பு.
கூவாங்கரையிலோ மதுபான கூடத்திலோ தமிழர்களின் பாரம்பரிய உடையான லுங்கியை மடித்து கட்டி குதத்தை ஆட்டிக் கொண்டு ஆடி பாட வேண்டிய பாடலை எப்படி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=VafF6nOWjxQ

அளவிற்கு மிஞ்சினால் பாயசமும் பாய்சன் தான்

அதிமுக  அமைச்சர்களின் விசுவாசத்தை பற்றித்தான்  சொல்கிறேன்.
“சிறையில் ஜெ. நலமுடன் இருப்பதாக டிஐஜி கூறுவது ஏன்?- ஜாமீன் கிடைப்பதை கெடுக்கும் முயற்சி என கர்நாடக அரசிடம் அதிமுகவினர் புகார்.”
அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் காட்டித்தான் ஜாமீன் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படி அம்மா நலமுடன் இருக்கிறார் என்று டிஐஜி சொன்னால் ஜாமீன் கொடுக்க மாட்டாங்கல்ல.. என்று “அமைச்சர்கள்” முறையிடுகிறார்களாம்.
“ஜெயலலிதாவின் கைதும்,அவரது சிறைவாசமும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சிறையில் நன்றாக இருக்கிறார் என்று சொன்னால் மக்களிடம் அமைதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.அதனால் தான் ஊடகங்கள் மூலம் எனது கடமையை நிறைவேற்றினேன்” – இது டிஐஜியின் பதில்.
வேறு ஒரு மாநில டிஐஜிக்கு இருக்கும் பொறுப்பு, நமது மாநில அமைச்சர்களுக்கு இல்லையே. அப்போ “அம்மாவிற்கு உடல் நலம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது” என்றா பேட்டி கொடுக்கச் சொல்கிறீர்கள். அப்படி சொன்னால் ஜாமீன் உடனே கொடுத்து விடுவார்களா ? அப்படி சொன்னால் தமிழகத்தில் என்ன ஆகும் என்று உங்களால் கணிக்க முடியாதா ? யாரோ எக்கேடோ கெட்டு போகட்டும். அம்மா வெளியே வரணும் என்பதில் தானேய்யா குறியாய் உங்கள் விசுவாத்தை காட்டுகிறீர்கள். நான் நலமுடன் இருக்கிறேன் என்று அம்மா சொல்வதை வைத்து தான் டிஐஜி பேட்டி கொடுக்கிறார். டிஐஜியை ஒன்றுமே பேசாமல் சும்மா வேறு இருக்க சொல்லுகிறார்களாம்.
தண்டனை என்று ஒன்று கொடுத்த பிறகு தடாலடியாக எல்லாம், எல்லா நீதிமன்றங்களில் வேலை நடந்து விடாது. பெரிய பெரிய வக்கீல்களை பிடித்து லட்சக்கணக்கில் ஃபீஸ் கொடுத்தால், தூக்கி கொடுத்து விடுவார்களா என்ன ?
கொஞ்சம் வெயிட் பண்ணா கீழ் கோர்ட்லேயே ஜாமீன் கொடுத்துட்டு போக போறாங்க..
மருந்து சாப்பிட்டா ஏழு நாளைக்குள்ள சரியாயிடும்.
மருந்து சாப்பிட்டலன்னா….. ?
ஒரு வாரத்தில சரியாயிடும் !
- மாதிரி

காந்தி ஜெயந்தி




அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்மா என்று நம்ப வேண்டும். அல்லது உங்களை நம்பவைத்தவரை அதிமகாத்மா என்று நம்ப வேண்டும். மன்னிக்கவும், அதைவிட காந்தியை நம்புவதற்கே அதிகமான ஆதாரங்கள் இருக்கின்றன.
- ஜெயமோகன்

Tuesday, September 30, 2014

குடி குடியை கெடுக்கும்


‘விஜய்’யின் மகாபாரதம் ஆகட்டும் ‘சன்’னின் மகாபாரதம் ஆகட்டும் சகுனி, துரியோதனன் & கோ இரவு நேரங்களில் அடுத்த நாளைக்கான சதியாலோசனையை சோம பானம் அருந்தி கொண்டேதான் நடத்துகிறார்கள். அப்போ மட்டும் “குடி குடியை கெடுக்கும்” டிஸ்கி ஏதும் போட மாட்டேன்றாங்க..
#தட்_தக்காளி_மொமென்ட்  :-)

Friday, September 19, 2014

கனவின்(ல்) வலி


மதியம், ஒரு குட்டி தூக்கத்திற்கு பிறகெழுந்து, டீ கேட்டு குடித்து Subway Surfers விளையாட ஆரம்பித்தான் அவினாஷ். ஓரிரு நிமிடங்களில் திடீர் கேள்வியை கேட்டான்.
“அப்பா, நான் கனவுல இருக்கிறேனா ? நிஜத்துல இருக்கிறேனா ?” -
“ஏண்டா கேக்குற ?”
“இல்ல, கனவுல எனக்கு Subway Surfers வேற மாதிரி ஸ்க்ரீன் வந்துச்சு. இங்க பாருங்க, இங்கேயும் வேற மாதிரி ஸ்க்ரீன் வருது, அதான் கேட்டேன்.”
ஏதோ ஒரு லெவலை கடந்து விட்டான் போலும். ஸ்க்ரீன், கலர் என கேமின் பேக் ட்ராப்பே மாறியிருக்கிறது. மூளையை முழுவதும் அந்த கேம் தான் ஆக்கிரமித்திருக்கிறது. என்ன செய்ய…
அவனை சீண்டும் பொருட்டு, தொடையில் லேசாய் கிள்ளி, “வலிக்குதா ?” என்றேன்.
“ஆமாம்”
“அப்போ இது நிஜம்!”
கொஞ்சம் யோசித்து..கேட்டான், “நீங்க கனவுல கிள்ளுனா. எனக்கு வலிக்குமா, வலிக்காதான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
— ங் + ஏ = ஙே….
கனவில்(ன்) வலி உணர முடியுமா ? முடியாதா ?