Wednesday, December 28, 2016

நயன்தாராவின் கண்டன அறிக்கையும் 'பிங்க்' திரைப்படமும்

ஹீரோயினாய் திரையுலகில் மிளிர வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களிடம், இயக்குனர்களிடம் (கொஞ்சம் வளர்ந்த கதாநாயகனாய் இருந்தால்; அவர்களிடத்திலும்) அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பது திரையுலகத்தின் உள்ளேயும் சரி, கடைக்கோடியில் இருக்கும் ரசிகனிடத்திலும் சரி எழுதப்படாத சட்டம் ஒன்றிருக்கிறது என்பது அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்த ஒன்று. இதன் உண்மைத்தன்மையின் சதவிகித ஆராய்ச்சியினை விட்டு விட்டே தொடர்வோம்.
பலத்த பின்புலம் கொண்டு, நாயகியாய் அறிமுகமாகும் நடிகைக்கு கூட தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொண்டே தான் களமாட வேண்டிய சூழல் இங்கே. (நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு திரையுலகில் கால் பதிக்க முயற்சித்த பொழுது நடிகர் சித்தார்த் உடன் ஒரே ஃப்ளாட்டில் தங்கியிருந்தார் - என்ற கிசுகிசு செய்தி நினைவிற்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பாகாது)
இந்த லட்சணத்தில் என்ன தான் சர்வ சாமுந்திரிகா லட்சணம் பொருந்தியிருந்தாலும், எந்த பின் புலமும் கொண்டிறாத புதுமுக நடிகைகளைப் பற்றி யோசித்து பாருங்கள். நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே தானே இருக்கிறது.
எல்லாம், எல்லா கஷ்டங்களையும் தாண்டி ஒரு உயர வரும் வரைக்கும் தான். உச்சாணிற்கு வந்து விட்டால் போதும். காமாசோமாவென யாரும் எளிதில் நெருங்கி விட முடியாது.
நயன்தாரா இயக்குனர் சுராஜிற்கு எதிராய் விடுத்திருக்கும் கண்டன அறிக்கை; அவரின் சார்பாய் மட்டுமல்ல.. ஒரு முன்னணி கதாநாயகியாய் இருக்கின்ற பட்சத்தில், அனைத்து நாயகிகளுக்கும் ஆதரவாய் விடுத்திருப்பது தான்.
என்ன.. அவர் விடுத்திருக்க வேண்டிய அறிக்கை முற்போக்குத்தனமாய் இல்லாமல் பிற்போக்குத்தனமாய் அமைந்து விட்டது.
'Parched' ஹிந்தி படத்தை தொடர்ந்து அளிக்கப்பட்ட ஒரு பேட்டியில், ராதிகா ஆப்தே இவ்வாறு பேசியிருக்கின்றார்.

“I don’t see why I should be ashamed of my body. That’s the one tool I use as a performer. I had no apprehensions doing bold scenes. I was also sure that I was really in good hands.” - Radhika Apte
என்னுடைய உடம்பை பற்றி நான் ஏன் வெட்கப்பட வேண்டும். என்னுடைய நடிப்புத்துறையில் அதையும் ஒரு கருவியாக உபயோகித்துக் கொள்கிறேன். அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை. பாதுகாப்பானவர்களில் கைகளில் தான் நாம் இருக்கிறோமா என்பதை மட்டும் உறுதிபடுத்திக் கொள்வேன். - ராதிகா ஆப்தே
உடனடியாய் தென்னிந்திய நடிகர் சங்கம் ராதிகா ஆப்தே தலைமையில் தென்னிந்திய கதாநாயகிகளுக்கு ஒரு பயிற்சி பட்டறை அளிக்கலாம் என்று தோன்றுகிறது அல்லவா!?!
நீங்கள் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞர் என்று வைத்துக் கொள்வோம். திறமையானவரும் கூட. (இதை எந்த வேலை பார்க்கும் ஒருவரும் தம்முடைய வேலையினை பொருத்திக் கொள்ளவும்) ஒப்பந்த அடிப்படையில் உங்களை அணுகும் ஒருவர்; அவருக்கு தேவையான விருப்பங்களை கூறி விட்டு உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். உங்களிடமிருந்து சிறப்பான பணியினையும் வாங்கி கொண்டு விடுகிறார். இப்போது அவர் வெளியில் போய்... 'அவன் கிடக்கிறான்... பொடிப் பையன்.. காசு கொடுத்தா.. வேலையை முடிச்சுக் கொடுக்கப் போறான்...' என்று சொன்னால் எப்படி இருக்கும் ? நம்மையும் நம் வேலையினையும் சேர்த்து அவமானப் படுத்தும் செயல் அல்லவா ? சுயமரியாதை உள்ள எவராலும் ஒப்புக் கொள்ள முடியாத செயல் அல்லவா?
'பிங்க்' திரைப்படம் சம்பந்தமாய் ஒரு சம்பவம்!
ஆணாக இருக்கும் உங்களுக்கும், நீங்கள் சமீப நாட்களாய் பழகும் ஒரு பெண் தோழியருக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு மனதளவில் நெருக்கம் கொள்கிறீர்கள். நல்லதொரு நன்னாளில் இருவரும் பீச் ரிசார்ட்ஸ்-இல் சந்திக்கலாம் என்று முடிவு செய்கிறீர்கள்.
அதுவரையில் நீங்கள் இருவருக்கு ஏதோ காபி ஷாப்; டீ ஷாப் போன்ற பொதுவான இடங்களில் மட்டுமே சந்தித்து இருக்கீன்றீர்கள். கிளம்புவதற்கு முன்தினம் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் காண்டம் ஃபிளேவரை பற்றி பேச்சினுடையே எதேச்சையாய் சமிஞ்சையும் கொடுத்து விடுகிறீர்கள். All Set.
குறிப்பிட்ட நாளில் பீச்சில் விளையாடுகிறீர்கள், நனைகிறீர்கள், சிறு சிறு தொடுதல்கள் மூலம் திளைக்கிறீர்கள். அறைக்கு திரும்புகின்றீர்கள். குளித்த தலை துவட்டலுக்கு பிறகு இருவரும் முத்தமிட்டு கொள்கிறீர்கள். சிறு சிறு இடைவெளிகளுக்கு பிறகு முத்தமிடல் கிளர்ச்சியுற்று ஆவேசம் கொள்கிறது.பின்பு இருவரும் படுக்கையில் சாய்கிறீர்கள்.
திடீரென யாரும் எதிர்பாராத உங்கள் தோழி, உங்களை தள்ளி விட்டு 'நோ' என்று சொல்கிறார். அதாவது செக்ஸ்ற்கு மறுக்கிறாள். இப்போது உங்களுக்கு இருக்கும்? பெண்ணை விட ஆண் உடலளவில் வலிமை மிக்கவன் என்பதால் இப்போது முரட்டுத்தனமாய் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறான். அது வேலைக்கு ஆகாத பட்சத்தில் கெஞ்சியோ கூத்தாடியோ காரியத்தை சாதித்து கொள்ள துடிக்கிறான்.
'நோ' என்று சொன்ன பின்னும் ஏன் பெண்ணின் பேச்சு எடுபடவில்லை? அவளுக்கு ஏன் அந்த உரிமை மறுக்கப்படுகிறது?
இது தான் பிங்க் திரைப்படத்தில் கேட்கப்படுகிறது.

படத்தில் ஒரு காட்சியில் குறுக்கு விசாரணை நடத்தும் வழக்கறிஞர் நாயகியிடம் 'இதற்கு முன் உங்களுக்கு செக்ஸ்-ல் அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கிறார். நாயகி 'அதற்கும் இந்த கேஸுற்கும் என்ன சம்பந்தம்?' என்கிறார். 'தயவு செய்து பதில் கூறவும்' என்று வழக்கறிஞர் பதில் பெறத் துடிக்கிறார். நாயகி தைரியமாய் 'ஆம். என்னுடைய இத்தனாவது வயதில், என்னுடைய ஆண் நண்பருடன் செக்ஸ் கொண்டிருக்கிறேன்.' என்று. 'தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..' என்று முடித்துக் கொள்கிறார், வழக்கறிஞர்
படம் பார்த்து நாட்கள் ஆகி விட்டதால், நினைவில் வருவதை கொண்டு சம்பவத்தை எழுதியிருக்கின்றேன். அதாவது வழக்கறிஞர் இங்கே என்ன நிரூபணம் செய்ய வருகின்றார் என்றால், 'இவள் ஏற்கனவே சோரம் போனவள் தானே! மறுபடியும் சோரம் போனால் என்ன தப்பு? அல்லது இவர் சோரம் போயிருக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம் ?என்று.
இதற்கிடையில் நாயகியிடம் வழக்கறிஞர் இவ்வாறும் கேட்பார். 'அந்த வயசுல செக்ஸ் வச்சுக்கிட்டீங்களே...அது தப்புன்னு உங்களுக்கு தோணலியா? என்று. அதற்கு நாயகி, "நானும் மேஜர் - அவரும் மேஜர், அதுவுமில்லாமல் நாங்கள் இருவரும் மனம் உவந்து தான் செக்ஸ் வைத்துக் கொண்டோம்" என்பார்.
அந்த மூன்று பெண்களுக்கு ஆதரவாய் வாதாடும் வழக்கறிஞராய் அமிதாப் பச்சன். அவர் நடிப்பின், குரலின் வழியாய் கேட்கப்படும் கேள்விகள் இன்னும் உக்கிரமாய் ஒளி - ஒலிக்கிறது.
பல காட்சிகளில் உணர்ச்சிவசப்பட நிலையிலேயே தான் இருந்தேன். இரண்டு காரணங்களாலேயும் இருக்கலாம். இரண்டாவது; தனிமையில் அமர்ந்து படம் பார்த்தது. முதலாவதும் முக்கியதுமான காரணம் மிதமான போதையில் இருந்தது. அதாவது பிம்பத்தில் இல்லாத உண்மை நிலையில் இருந்தது.

0 comments:

Post a Comment