Tuesday, June 13, 2017

கடுகு


படத்தில் 'வில்லன்' பரத் கதாப்பாத்திரத்தை அவ்வளவு யதார்த்தமாய் சித்தரிக்க முடிந்தவர்களால், ஏன் 'கதாநாயகன்' ராஜ்குமார் பாத்திரத்தை அவ்வாறே வடிவமைக்க முடியவில்லை ?
பரத்தின் பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி, ஓட்டிப் பார்த்தால்.. நல்ல படமாய் இருக்கும் போலிருக்கே.. என்று சிலாகிக்க முடியும். பரத்தும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவர் நடித்த படத்திலேயே சிறப்பானது இது தான்.
தேவயானி புருஷர் ராஜ்குமாரின் கதாப்பாத்திரத்திற்கு வரலாம். விக்ரமன் படத்தில் வரும் நல்லவர்களுக்கே சவால் விடும் பாத்திரப்படைப்பு. காதலியாய் வரும் 'குற்றம் கடிதல்' நாயகி ராதிகா ப்ரஷித்தா, அவரின் ஃபிளாஸ்பேக்கை அவிழ்த்து விடும் போதே, படம் மூழ்க ஆரம்பித்து விடுவது கண்ணுக்கெதிராய் தெரிகிறது.
யதார்த்தத்தோடு சினிமாதனத்தை கலக்குகிறோம் பேர்வழி என்று அமெச்சூர் நாடகத்தனத்தை ஓவர் டோஸாய் கலந்து விட்டார்கள்.

ஒரு கிடாயின் கருணை மனு !


கிராமத்து கதைக்களம் என்பதால் கிராம பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு இந்த படம் நிச்சயமாய் செம ட்ரீட்.
ரொம்பவுமே யதார்த்தமாய் எடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திரைக்கதையும் விறுவிறுப்பாக கையாளப்பட்டிருக்கிறது. நிறைய நடிகர்கள். அத்துனை பேரும் ஆர்ப்பாட்டமாய் நடித்திருக்கிறார்கள்.
ஹீரோயின் ப்ரவீனா. இன்றைய டாப் ஹீரோயின்ஸ் அனைவருக்கும் டப்பிங் கொடுத்து வருபவர். இவரைப் பற்றி ஏற்கனவே அம்மணியின் போட்டோ போட்டு சிலாகித்திருக்கிறேன். குளோஸ் அப்-ல் பார்க்கும் போது மட்டும் அம்மணி ஹீரோயின் மெட்டீரியாலாய் இல்லையே என்று வருத்தப்பட வைக்கிறார்.
வக்கீலாய் வரும் ஜார்ஜ் கதாப்பாத்திரம் தான் உச்சம். என்ன தான் சொந்தக்காரனாய் இருந்தாலும், தொழில் என்று வரும் போது அவர்கள் எப்படி காசு பண்ண பார்ப்பார்கள் என்பதை ரொம்ப அழகாய் எடுத்து காண்பித்திருக்கிறார், இயக்குனர்.
நம் மண்ணின் கலாச்சரத்தை களமாக கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை என்பதால் இதை உலக சினிமாவோடு ஒப்பிடுகிறார்கள். சந்தோஷம்.
ஒரு கிடாயின் பார்வையில் சொல்லப்பட்ட இந்த படம் என் வீட்டு சஹா வின் பார்வையில் :

படம் புடிச்சிருக்கா.. ? - இது நான்.
"பரவால்ல.. ஏதோ ஊரு ஃபங்க்ஷனு கிளம்புறாங்கா.. ஆக்ஸிடென்ட் நடக்குது... சுத்தி சுத்தி அதையே தான் காமிச்சிட்டு இருக்காங்க.. "
"ஏன்.. நல்லா தானே போச்சு. காமெடியால்ல பேசிட்டு இருந்தாங்கா.. "
"இருந்தாங்க... இந்த மாதிரி படத்தையெல்லா இவ்ளோ செலவு பண்ணி.. இவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல பாக்கணும்னு என்ன அவசியம்..? பெரிய பெரிய செட் போட்டு எடுக்குற படங்க.. (பாகுபலியை குறிப்பிடுகிறார்) நிறைய ஃபாரின் லோகேஷன்ஸ் காம்பிச்சு.. நல்ல நல்ல சாங்ஸ் வர்ற படங்க... (ஷங்கர் படங்களை குறிப்பிடுகிறார்) இதையெல்லா தேட்டர்ல வந்த பாத்தா எஸ்சைட்மென்டா இருக்கும். இது என்னடானா.. முக்காவாசி படத்தை ஒரே இடத்துல குத்த வச்சு எடுத்துருக்காங்க.. இதுக்கு 450 ரூவா டிக்கெட் 550 ரூவாயிக்கு ஸ்நாக்ஸ் 90 ரூவா பார்க்கிங்குக்கு..
அமைதியாய் இருந்து தந்திரமாய் தப்பித்து கொள்ளவும் என்று நம் முன்னோர்கள் சொன்னது ஒன்றும் முட்டாள்தனமில்லை. அதையே கடைப்பிடித்தேன்.
பார்கிங்கிலிருந்து வண்டியை கிளப்பி ஸ்லோப்பில் ஏற்றி கொண்டிருக்கும் போது சொன்னார்கள்... 'இதுக்கு பேசாம 'தொண்டன்' படத்திற்கு போயிருக்கலாம்...' கெதக் என்றிருந்தது.

சங்கிலி புங்கிலி கதவை திற


ஃபாக்ஸ் ஸ்டார், அட்லீ, மகன், சம்மர் லீவு, குடும்பம், பாப்கார்ன் கோக் காம்போ முதலானவைகளையே முக்கிய காரணம், படத்தை பார்க்க முடிவெடுத்ததற்கு.
வீட்டுப் ப்ரோக்கர் ஜீவா. ஒவ்வொரு வீட்டையும் ஏதாவது தகிடுதத்தம் செய்து தான் விற்கிறார். அவர் வாங்க விரும்பும் வீட்டிற்கும் அதே பாணியை பின்பற்ற.. அதுவே 'பூதாகாரமாய் விடிகிறது.
படம் கொஞ்சம் யதார்த்தமாய் தான் ஆரம்பிக்கிறது. நல்லாதானே போயிட்டு இருக்கு.. எனும் சமயத்தில், திடீரென முகம் தெரியாத ஆட்களால் நம் முகத்தை போர்வையில் பொத்தி, கும்மு கும்முவென கும்மப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி.. ஜீவா வீடு வாங்குவதற்கான லட்சிய காரண ஃபிளாஸ்பேக்கை சொல்லி, கும்மி அப்புறம் அவிழ்த்து விடுகிறார்கள்.
சரி போகட்டும், அந்த பேய் ராதாரவிக்காவது பயந்து, ஒரு உருப்படியான ஃபிளாஸ்பேக்கை வைத்திருக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் சுந்தர் சி யின் சீரியல் ரேஞ்சிற்கு இருக்கிறது.
இரண்டு கிளை கதைகளும் சொதப்பிய பின், எஞ்சி நிற்பது ஜீவா சூரி காமெடி காம்போ தான். ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். ஹீரோயினாக ஸ்ரீவித்யா இருக்கிறார்.
இயக்குனர் 'ஐக்' எம்ஆர் ராதாவின் பேரன் என்று அறிய வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் படத்தில் ராதாரவி, ராதிகா, எம் ஆர் வாசு போன்ற குடும்ப உறுப்பினர்கள் தென்பட்டனர். அதே சமயத்தில் இயக்குனர், கமலிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் தெரிய வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான், படத்தில் ஒரு காட்சி கூட தென்படவில்லை.

டோரா :


சொந்த குரலில் 'அப்பா.. அப்பா.. ' என்று கூப்பிடும் அழகாட்டும், அப்பாவை அவ்வப்போது கலாய்ப்பதாகட்டும் நயன் கொள்ளை அழகு. என்ன ஜீரோ சைஸ் ஆகிறேன் பேர்வழி என்று உடம்பை வத்தலாக்கி வைத்திருக்கிறார். வத்தலோ, தொத்தலோ.. நடிப்பில் குறையொன்றும் வைக்கவில்லை. அவருக்கு முத்தான முதற்கண் வணக்கம்.
நயனின் நடிப்பை யாரேனும் பிடிக்கவில்லை என்று சொன்னால், வீடு தேடி வந்து அடிப்பேன். எங்கே வா - என்று சொன்னால்... தந்திரமாய் இந்த பத்தியை மட்டும் டெலீட் செய்து விடுவேன்.
பரவாயில்லை.. அப்பா தம்பி ராமையா தமது சில்மிஷங்களை காட்டாமல் இருக்கிறாரே.. என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூச்செடுக்கும் அதே சமயத்தில் தமது நவரச திறன்களை வெளிப்படுத்தி 'ராமையாடா' என்று நிரூபித்து விடுகிறார்.
சுவாரசியமான பிளாட் கொண்ட கதை தான். நகரில் பானிபூரி விற்பது, பெட்ஷீட் விற்பது என உப தொழில் செய்து கொண்டே வீடுகளை நோட்டம் விட்டு கொள்ளை/கொலைகளை நிகழ்த்தும் கும்பல். அவர்களை பிடிக்க தீவிரமாய் trace அவுட் செய்யும் இன்ஸ்பெக்டர்.
ஒரு கட்டத்தில், கொள்ளையர்கள் ஒவ்வொருவராய் இறக்கின்றனர். காவல்துறைக்கு மேலும் தலைவலி. இப்போது கொள்ளையர்களை கொலை பண்ணும் ஆளை தேடி அலைய வேண்டியதாகிறது. கொலை செய்வது யார் ? நயனிடம் வந்து சேரும் காரின் பின்னணி என்ன ? என்று படிப்பதற்கு விறுவிறுப்பான தானே இருக்கிறது !
ஆனால் அதை காட்சி மொழியாய் திரையில் பார்க்கும் பொழுது முழுவதுமாய் ட்ரான்ஸ்ஃபார்ம் இந்தப் படம் நல்லதொரு காட்சி அனுபவத்தை கொடுக்கவில்லை. திரைக்கதையில் அழுத்தமும் இறுக்கமும் நெகிழ்வும் இல்லை. :-P . எல்லாம் இருந்தும் ஏதுமில்லா ஜென் நிலை.
படத்தை பார்க்கலாமா ? வேண்டாமா ? என்று கேட்பீர்களேயானால்.. 'கண்டிப்பாய் பார்க்கலாம்..' என்றே சொல்வேன். பார்த்து விட்டு எங்கே மிஸ் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லும் பட்சத்தில்.

பாகுபலி 2 (நோ ஸ்பாய்லர்ஸ்)


இந்த படத்தை எடுப்பதாக தான் படத்தின் இயக்குனர் ராஜமௌலி வேலைகளை ஆரம்பித்தார். கதையும் திரைக்கதையும் சுவாரசியமாகவும் பிரமாண்டமாகவும் போக ஆரம்பிக்கவே.. அவரின், அவர் சகாக்களின் பிசினஸ் மூளை வேலை செய்ய ஆரம்பித்து, இரண்டு பாகமாக கூறு போட்டு, ஜவ்வ்வ்...வு மிட்டாயாயை இழுத்து முதல் பாகத்தில் நமக்கு படம் காட்டினார்கள். வெறும் பிரமாண்ட காட்சிகளால் மட்டுமே நிறைந்திருந்தது அந்த முதல் பாகம். எந்தவொரு அழுத்தமான காட்சிகளும் அறவே இல்லை. சிவகாமி, இரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் அந்த ஒரே ஒரு ஸ்டைலான காட்சியை தவிர.
ஆக, இந்த இரண்டாம் பாகம் தான் ஒரிஜினல் திரைக்கதை. எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் சுவாரசியமான கதை சொல்லல் மற்றும் திரைக்கதை அமைப்பு. காலங்காலமாய் மணிரத்தினம் கடைப்பிடிக்கும் அதே ஃபார்மூலா தான். மகாபாரதத்தை அடிப்படையாய் வைத்து ஒரு இதிகாச ராஜா காலத்துக் கதையை ராஜமௌலியின் அப்பா எழுதியிருக்கிறார். சினிவிகடனில் அந்த மகாபாரத லிங்க் வரலாம். அப்போது படித்துக் கொள்ளுங்கள்.
ராஜமௌலியின் அப்பா கதை அல்லவா... அப்படியே அவரின் மாமா கீரவாணி தான் இசை. பிரமாண்ட படம். பட்டையை கிளம்பியிருக்க வேண்டிய பாடல்கள். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லவே இல்லை. பாடல்கள் விஷயத்தில் பெரும் கோட்டையை விட்டிருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் கைகூடாத காதல் அத்தியாயங்கள் இந்த பாகத்தில் கதையின் ஊடே அருமையாய் ஓர்க் அவுட் ஆகியிருக்கிறது. காரணம் அனுஷ்கா எனும் பெரும் ராட்சஷி. அவரின் அழகு, உடல்வாகு என அம்சமாய் பொருந்தி போக, அவர் வெறுமனே கோபமாய் பேசினால் கூட, அந்த கதாப்பாத்திர வடிவமைப்பிற்கு அவ்வளவு அழகாய் பொருந்தி போகிறது. அது தான் அவரின் சக்ஸஸ். அல்ல. அவரை இம்மாதிரியான கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கும் கர்த்தாவின் சக்ஸஸ்.
ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் ஹீரோவிற்கு இணையான வில்லனாய் ராணா என்று காஸ்டிங் அமைந்தது படத்திற்கு பெரும்பலம். அதை இந்த பாகத்தில் மட்டுமே உணர முடிகிறது,
அவ்வளவு நேசிக்கும் வளர்ப்பு மகனிற்காக இவ்வளவு தூரம் இறங்கி போவாரா.. என்பது சற்றே எனக்கு உறுத்தலாய் இருந்தது. மகனின் வாழ்வில் இன்னொரு பெண் வந்து, அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் சமயத்தில் தாயிற்கு வரும் சஞ்சலம் தான் இது என்று நிபுணர்கள் காரணம் கூறக் கூடும்.
பிரமாண்ட அனுஷ்காவின் முன்னால், மாறுவேடப் போட்டியில் வரும் பள்ளி மாணவியை போல தமன்னா வீரம் காட்டுகிறார். ஒத்த வைத்துப் பார்க்கும் போது தான் கிழ வேசமானாலும் அனுஷின் வீரியம் தெரிகிறது.
நாட்டின் பிரஜைகள் என்று காட்டப்படும் போதெல்லாம், அப்பா பாகுபலி காலத்திலும் சரி, மகன் பாகுபலி காலத்திலும் சரி அந்த ஒரே குரூப் நடிகர்கள் வந்து முகம் காட்டுவது சற்றே சிரிப்பை வரவழைத்தது.
மனைவி, மகனுடன் சென்றிருந்தேன். குடும்பத்தோடு முழுவதுமாய் அனுபவிக்கக் கூடிய படமாய் அமைந்திருந்தது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் இயக்குனருக்கு.

தர்மதுரை


படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனது. அதற்காக சீனு ராமசாமி & டீமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நல்ல கதைக்களம் அமைந்து விட்டாலே திரைக்கதை அமைப்பு தானாய் சூடு பிடிக்கும். நிறைவான திரைப்படம். ஆகவே நிறைகளுடன் எனக்குப்பட்ட குறைகளை பெரிதாய் பகிர்ந்து கொள்கிறேன்.
டாக்டருக்கு படித்த விஜய் சேதுபதி, ப்ராக்டிஸ் பண்ணாமல் பொழுதன்னைக்கும் தண்ணி அடித்துக் கொண்டு, அவரின் அண்ணன் மற்றும் தம்பிகளுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். அவருக்கு ஒரே ஆறுதல், அவரின் அம்மா ராதிகா.
இதற்கெல்லாம் காரணங்கள் என்ன ? என்கின்ற கேள்விகளுடன் படத்தின் ஆரம்பம் நகர்கிறது. பிரச்சினைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும் சமயத்தில், அம்மா ராதிகா, விசே வை ஊரை விட்டு கிளப்புகின்றார்.
அவர் இரவோடு இரவாக ஊரை விட்டு மாயமானதால், அவரின் குடும்பம் ஊருக்குள் பெரும் பிரச்சினையை சந்திக்கிறது. அவரை தேடி அண்ணன், தம்பிகள் & கோ கிளம்புகிறார்கள்.
விசே வோ அவரின் நண்பர்களை தேடிப் போகின்றார். அவரின் நலம் விரும்பிகளான பெண் தோழிகளை. ஒரு பக்கம் அவர் போகும் இடங்களிலெல்லாம் துரத்தும் அண்ணன் & கோவின் திரைக்கதை. மறு பக்கம் விசே தேடிப்போகும் தோழிகளில் கதை என்று எவ்வளவு சுவாரஷ்யம்!
இங்கே விசே சீட்டுப் பணத்தை, அவருக்கே தெரியாமல் எடுத்து போனதால் தான் பிரச்சினை. அதனால் தான் அவர் துரத்தப்படுகின்றார் என்பதை தாண்டிய ஒரு பிரச்சினையை வைத்திருக்கலாம். இன்னும் வேகம் + பரபரப்பு கிடைத்திருக்கும். நம்பகத்தன்மையை இன்னும் அதிகரித்திருக்கலாம்.
சாலினி டைப் நாயகியாகவே பார்த்து பழக்கப்பட்ட தமன்னா இதில் அண்டர் ஃபிளே செய்து, தான் ஒரு மிகச் சிறந்த நடிகை என்று நிரூபிக்கின்றார். அவர் மட்டுமா ? ஸ்டெல்லாவும் அழகு. அவரின் கேரக்டர் வடிவமைப்பும் அழகு. கூடவே இன்னொரு தோழியும் நின்றார். அவரும் அழகு.
ஸ்டெல்லா காதலிப்பதோடு நிப்பாட்டியிருக்கலாம். ஹீரோவை ஹீரோயின் காதலித்தே ஆக வேண்டும் என்ற ஃபார்முலாவை தவிர்த்திருக்கலாம். (விசே, தமன்னாவிடம் 'ஏய்.. நீ காலேஜ் படிக்கும் போது என்னைய லவ் பண்ணல்ல.. ' என்ற வசனமும், சம்பந்தப்பட்ட காட்சியும்).
விசே - அந்த நிலைமைக்கு ஆளான ஃபிளாஷ்பேக் கதையில், அவரின் காதலியாய் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். 'அண்ணா அண்ணா..' என்று சொல்லி பின்பு 'மாமா..' என்று கிராமத்து மின்னலாய் ஜொலிக்கின்றார்.
திருப்பதி லட்டுவின் சுவை கூட அவ்வப்போது மாறக் கூடியது. அனால் விஜய் சேதுபதியின் நடிப்பின் சுவை மாறாதது. அவ்வபோது கிராமத்து ஆங்கிலத்தில் பேசுவது கூடுதல் இனிமை. மம்மிபை... மிஸ்டர் கோபால்..
படத்தில் ஒன்றிவிட்டோமேயானால் நமக்கு இந்த பேக் ரவுண்ட் மியூசிக்-ஐ தனித்து பிரித்தறிந்து ரசிக்கத் தெரிவதில்லை. இந்த குறை பல நாட்களாகவே எனக்குண்டு. மக்கா பாடலும் ஆண்டிப்பட்டி பாடலும் முதல் தரம்.
அழுத்தமான காட்சிகளால் ஆங்காங்கே துக்கம் தொண்டை. கண்களில் நீர் தளும்பல். ஓவர் சென்டிமென்ட்டான ஆளாய், நான் மாறி விட்டதை உறுதிப்படுத்தியது.

8 தோட்டாக்கள் : (no spoilers)


அதர்மத்தினை முன்னெடுக்கும் அபாயகரமான முன் உதாரணம் இந்த 8 தோட்டாக்கள் படம் என்று தலைப்பிட்டு நிபுணத்துவத்தை காண்பிக்கலாம் என்று தான் யோசித்தேன். ஆனால் நானோ, கடவுள் இருக்கான் குமாரு முதற் கொண்டு சற்றே பின்னோக்கி தொடரி, ரெமோ, வாகா வகை படங்களை பார்த்த பாவியாகிறேன். அதில் சில படங்கள் வசூல் ரீதியாய் வெற்றிகளை வேறு கண்டுள்ளது.
இந்த படத்தின், ஆரம்ப காட்சிகள் ஏனோ சற்றே மெதுவாய் தான் நகர்கிறது என்பது மறுப்பதிற்கில்லை. ஹீரோவோ 'செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி' வரிசையில் முன் நிற்கிறார். தயாரிப்பாளர் மகன் ! கதை நாயகனின் பாத்திர வடிவைமைப்பு அப்படி ! என்று பொறுத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், நம் ஹீரோ பொறுமையாய் நடித்து நம் பொறுமைக்கே சோதனை வைக்கிறார்.
கிளைக்கதையில் வில்லனின் மனைவிக்கும் அவனின் அடியாள் நண்பனின் உறவிற்கும் என்று திரைக்கதை பட்டும் படாமலும் ஆரண்யகண்டத்தை நினைவு படுத்தி செல்லும் போது கதை சூடு பிடிக்கிறது.
எம் எஸ் பாஸ்கரின் பிராதன கதாப்பாத்திர வடிவைமைப்பு பிரமாதம். 'மொழி'க்கு அப்புறம் மிகவும் ரசிக்கும்படியான நடிப்பு. தம்பிராமையா என்ற கதாப்பாத்திரம் தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கா விட்டால் எம் எஸ் பாஸ்கர் தான் அந்த இடத்தை நிரப்பியிருப்பார். நல்ல வேளை தப்பித்தார் அவர். இனி நல்ல வாய்ப்புகள் கிட்டட்டும்.
நாசரும் படத்தை காப்பாற்றுவதில் ஒரு பங்காற்றுகிறார். நாயகனின் நடிப்பு, நாயகியின் முக அமைப்பு என்று சற்றே படம் பின் தங்கினாலும், படம் ஒரு அருமையான முயற்சி. 
காட்சியமைப்பிலோடும் தேவையான வசன நகர்த்தலோடும் நகரும் இம்மாதிரியான திரைக்கதை கொண்ட படத்தில், எதிர் காதாப்பத்திரம் அமைந்த அளவிற்கு அமையாத அசமஞ்ச ஹீரோ படத்தின் பெரும் பிரச்சனை.

மணிரத்தினம் படத்தை இப்பவும் அவரின் பழைய ரெக்கார்டிக்காக சகித்துக் கொண்டு பார்ப்பதை விட, இம்மாதிரியான ஆட்களின் படங்களை தாராளமாய் இரு கண்கள் கொண்டு பார்க்கலாம்.
கிளைமாக்ஸ் முடிந்த பிறகு காரை ஒட்டிச் செல்லும் ஹீரோ சிக்னலில் காரை நிற்பாட்டுவார். அங்கே அவர் பார்க்கும் நபர் ஒருவரால் தான் சிறுவயதில் சிறைக்கே சென்றிருப்பார். இப்போது அவர் பார்க்கும் பொழுதோ.. செம ஜாலியாய் பேசிக் கொண்டிருப்பார். அதோடு படம் முடியும். முதலில் புரியவில்லை.
சற்றே யோசித்ததில், படத்தில் நாசர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. 'நல்ல்லவனாய் இருந்தால் கோவில் வாசலில் விபூதி தான் விற்கணும்..' என்பது.