Tuesday, June 13, 2017

பாகுபலி 2 (நோ ஸ்பாய்லர்ஸ்)


இந்த படத்தை எடுப்பதாக தான் படத்தின் இயக்குனர் ராஜமௌலி வேலைகளை ஆரம்பித்தார். கதையும் திரைக்கதையும் சுவாரசியமாகவும் பிரமாண்டமாகவும் போக ஆரம்பிக்கவே.. அவரின், அவர் சகாக்களின் பிசினஸ் மூளை வேலை செய்ய ஆரம்பித்து, இரண்டு பாகமாக கூறு போட்டு, ஜவ்வ்வ்...வு மிட்டாயாயை இழுத்து முதல் பாகத்தில் நமக்கு படம் காட்டினார்கள். வெறும் பிரமாண்ட காட்சிகளால் மட்டுமே நிறைந்திருந்தது அந்த முதல் பாகம். எந்தவொரு அழுத்தமான காட்சிகளும் அறவே இல்லை. சிவகாமி, இரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் அந்த ஒரே ஒரு ஸ்டைலான காட்சியை தவிர.
ஆக, இந்த இரண்டாம் பாகம் தான் ஒரிஜினல் திரைக்கதை. எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் சுவாரசியமான கதை சொல்லல் மற்றும் திரைக்கதை அமைப்பு. காலங்காலமாய் மணிரத்தினம் கடைப்பிடிக்கும் அதே ஃபார்மூலா தான். மகாபாரதத்தை அடிப்படையாய் வைத்து ஒரு இதிகாச ராஜா காலத்துக் கதையை ராஜமௌலியின் அப்பா எழுதியிருக்கிறார். சினிவிகடனில் அந்த மகாபாரத லிங்க் வரலாம். அப்போது படித்துக் கொள்ளுங்கள்.
ராஜமௌலியின் அப்பா கதை அல்லவா... அப்படியே அவரின் மாமா கீரவாணி தான் இசை. பிரமாண்ட படம். பட்டையை கிளம்பியிருக்க வேண்டிய பாடல்கள். ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லவே இல்லை. பாடல்கள் விஷயத்தில் பெரும் கோட்டையை விட்டிருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் கைகூடாத காதல் அத்தியாயங்கள் இந்த பாகத்தில் கதையின் ஊடே அருமையாய் ஓர்க் அவுட் ஆகியிருக்கிறது. காரணம் அனுஷ்கா எனும் பெரும் ராட்சஷி. அவரின் அழகு, உடல்வாகு என அம்சமாய் பொருந்தி போக, அவர் வெறுமனே கோபமாய் பேசினால் கூட, அந்த கதாப்பாத்திர வடிவமைப்பிற்கு அவ்வளவு அழகாய் பொருந்தி போகிறது. அது தான் அவரின் சக்ஸஸ். அல்ல. அவரை இம்மாதிரியான கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கும் கர்த்தாவின் சக்ஸஸ்.
ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் ஹீரோவிற்கு இணையான வில்லனாய் ராணா என்று காஸ்டிங் அமைந்தது படத்திற்கு பெரும்பலம். அதை இந்த பாகத்தில் மட்டுமே உணர முடிகிறது,
அவ்வளவு நேசிக்கும் வளர்ப்பு மகனிற்காக இவ்வளவு தூரம் இறங்கி போவாரா.. என்பது சற்றே எனக்கு உறுத்தலாய் இருந்தது. மகனின் வாழ்வில் இன்னொரு பெண் வந்து, அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் சமயத்தில் தாயிற்கு வரும் சஞ்சலம் தான் இது என்று நிபுணர்கள் காரணம் கூறக் கூடும்.
பிரமாண்ட அனுஷ்காவின் முன்னால், மாறுவேடப் போட்டியில் வரும் பள்ளி மாணவியை போல தமன்னா வீரம் காட்டுகிறார். ஒத்த வைத்துப் பார்க்கும் போது தான் கிழ வேசமானாலும் அனுஷின் வீரியம் தெரிகிறது.
நாட்டின் பிரஜைகள் என்று காட்டப்படும் போதெல்லாம், அப்பா பாகுபலி காலத்திலும் சரி, மகன் பாகுபலி காலத்திலும் சரி அந்த ஒரே குரூப் நடிகர்கள் வந்து முகம் காட்டுவது சற்றே சிரிப்பை வரவழைத்தது.
மனைவி, மகனுடன் சென்றிருந்தேன். குடும்பத்தோடு முழுவதுமாய் அனுபவிக்கக் கூடிய படமாய் அமைந்திருந்தது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் இயக்குனருக்கு.

0 comments:

Post a Comment