Tuesday, June 13, 2017

8 தோட்டாக்கள் : (no spoilers)


அதர்மத்தினை முன்னெடுக்கும் அபாயகரமான முன் உதாரணம் இந்த 8 தோட்டாக்கள் படம் என்று தலைப்பிட்டு நிபுணத்துவத்தை காண்பிக்கலாம் என்று தான் யோசித்தேன். ஆனால் நானோ, கடவுள் இருக்கான் குமாரு முதற் கொண்டு சற்றே பின்னோக்கி தொடரி, ரெமோ, வாகா வகை படங்களை பார்த்த பாவியாகிறேன். அதில் சில படங்கள் வசூல் ரீதியாய் வெற்றிகளை வேறு கண்டுள்ளது.
இந்த படத்தின், ஆரம்ப காட்சிகள் ஏனோ சற்றே மெதுவாய் தான் நகர்கிறது என்பது மறுப்பதிற்கில்லை. ஹீரோவோ 'செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி' வரிசையில் முன் நிற்கிறார். தயாரிப்பாளர் மகன் ! கதை நாயகனின் பாத்திர வடிவைமைப்பு அப்படி ! என்று பொறுத்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், நம் ஹீரோ பொறுமையாய் நடித்து நம் பொறுமைக்கே சோதனை வைக்கிறார்.
கிளைக்கதையில் வில்லனின் மனைவிக்கும் அவனின் அடியாள் நண்பனின் உறவிற்கும் என்று திரைக்கதை பட்டும் படாமலும் ஆரண்யகண்டத்தை நினைவு படுத்தி செல்லும் போது கதை சூடு பிடிக்கிறது.
எம் எஸ் பாஸ்கரின் பிராதன கதாப்பாத்திர வடிவைமைப்பு பிரமாதம். 'மொழி'க்கு அப்புறம் மிகவும் ரசிக்கும்படியான நடிப்பு. தம்பிராமையா என்ற கதாப்பாத்திரம் தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கா விட்டால் எம் எஸ் பாஸ்கர் தான் அந்த இடத்தை நிரப்பியிருப்பார். நல்ல வேளை தப்பித்தார் அவர். இனி நல்ல வாய்ப்புகள் கிட்டட்டும்.
நாசரும் படத்தை காப்பாற்றுவதில் ஒரு பங்காற்றுகிறார். நாயகனின் நடிப்பு, நாயகியின் முக அமைப்பு என்று சற்றே படம் பின் தங்கினாலும், படம் ஒரு அருமையான முயற்சி. 
காட்சியமைப்பிலோடும் தேவையான வசன நகர்த்தலோடும் நகரும் இம்மாதிரியான திரைக்கதை கொண்ட படத்தில், எதிர் காதாப்பத்திரம் அமைந்த அளவிற்கு அமையாத அசமஞ்ச ஹீரோ படத்தின் பெரும் பிரச்சனை.

மணிரத்தினம் படத்தை இப்பவும் அவரின் பழைய ரெக்கார்டிக்காக சகித்துக் கொண்டு பார்ப்பதை விட, இம்மாதிரியான ஆட்களின் படங்களை தாராளமாய் இரு கண்கள் கொண்டு பார்க்கலாம்.
கிளைமாக்ஸ் முடிந்த பிறகு காரை ஒட்டிச் செல்லும் ஹீரோ சிக்னலில் காரை நிற்பாட்டுவார். அங்கே அவர் பார்க்கும் நபர் ஒருவரால் தான் சிறுவயதில் சிறைக்கே சென்றிருப்பார். இப்போது அவர் பார்க்கும் பொழுதோ.. செம ஜாலியாய் பேசிக் கொண்டிருப்பார். அதோடு படம் முடியும். முதலில் புரியவில்லை.
சற்றே யோசித்ததில், படத்தில் நாசர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. 'நல்ல்லவனாய் இருந்தால் கோவில் வாசலில் விபூதி தான் விற்கணும்..' என்பது.

0 comments:

Post a Comment