Tuesday, June 13, 2017

தர்மதுரை


படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனது. அதற்காக சீனு ராமசாமி & டீமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நல்ல கதைக்களம் அமைந்து விட்டாலே திரைக்கதை அமைப்பு தானாய் சூடு பிடிக்கும். நிறைவான திரைப்படம். ஆகவே நிறைகளுடன் எனக்குப்பட்ட குறைகளை பெரிதாய் பகிர்ந்து கொள்கிறேன்.
டாக்டருக்கு படித்த விஜய் சேதுபதி, ப்ராக்டிஸ் பண்ணாமல் பொழுதன்னைக்கும் தண்ணி அடித்துக் கொண்டு, அவரின் அண்ணன் மற்றும் தம்பிகளுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். அவருக்கு ஒரே ஆறுதல், அவரின் அம்மா ராதிகா.
இதற்கெல்லாம் காரணங்கள் என்ன ? என்கின்ற கேள்விகளுடன் படத்தின் ஆரம்பம் நகர்கிறது. பிரச்சினைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும் சமயத்தில், அம்மா ராதிகா, விசே வை ஊரை விட்டு கிளப்புகின்றார்.
அவர் இரவோடு இரவாக ஊரை விட்டு மாயமானதால், அவரின் குடும்பம் ஊருக்குள் பெரும் பிரச்சினையை சந்திக்கிறது. அவரை தேடி அண்ணன், தம்பிகள் & கோ கிளம்புகிறார்கள்.
விசே வோ அவரின் நண்பர்களை தேடிப் போகின்றார். அவரின் நலம் விரும்பிகளான பெண் தோழிகளை. ஒரு பக்கம் அவர் போகும் இடங்களிலெல்லாம் துரத்தும் அண்ணன் & கோவின் திரைக்கதை. மறு பக்கம் விசே தேடிப்போகும் தோழிகளில் கதை என்று எவ்வளவு சுவாரஷ்யம்!
இங்கே விசே சீட்டுப் பணத்தை, அவருக்கே தெரியாமல் எடுத்து போனதால் தான் பிரச்சினை. அதனால் தான் அவர் துரத்தப்படுகின்றார் என்பதை தாண்டிய ஒரு பிரச்சினையை வைத்திருக்கலாம். இன்னும் வேகம் + பரபரப்பு கிடைத்திருக்கும். நம்பகத்தன்மையை இன்னும் அதிகரித்திருக்கலாம்.
சாலினி டைப் நாயகியாகவே பார்த்து பழக்கப்பட்ட தமன்னா இதில் அண்டர் ஃபிளே செய்து, தான் ஒரு மிகச் சிறந்த நடிகை என்று நிரூபிக்கின்றார். அவர் மட்டுமா ? ஸ்டெல்லாவும் அழகு. அவரின் கேரக்டர் வடிவமைப்பும் அழகு. கூடவே இன்னொரு தோழியும் நின்றார். அவரும் அழகு.
ஸ்டெல்லா காதலிப்பதோடு நிப்பாட்டியிருக்கலாம். ஹீரோவை ஹீரோயின் காதலித்தே ஆக வேண்டும் என்ற ஃபார்முலாவை தவிர்த்திருக்கலாம். (விசே, தமன்னாவிடம் 'ஏய்.. நீ காலேஜ் படிக்கும் போது என்னைய லவ் பண்ணல்ல.. ' என்ற வசனமும், சம்பந்தப்பட்ட காட்சியும்).
விசே - அந்த நிலைமைக்கு ஆளான ஃபிளாஷ்பேக் கதையில், அவரின் காதலியாய் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் பிரமாதப்படுத்தியிருக்கிறார். 'அண்ணா அண்ணா..' என்று சொல்லி பின்பு 'மாமா..' என்று கிராமத்து மின்னலாய் ஜொலிக்கின்றார்.
திருப்பதி லட்டுவின் சுவை கூட அவ்வப்போது மாறக் கூடியது. அனால் விஜய் சேதுபதியின் நடிப்பின் சுவை மாறாதது. அவ்வபோது கிராமத்து ஆங்கிலத்தில் பேசுவது கூடுதல் இனிமை. மம்மிபை... மிஸ்டர் கோபால்..
படத்தில் ஒன்றிவிட்டோமேயானால் நமக்கு இந்த பேக் ரவுண்ட் மியூசிக்-ஐ தனித்து பிரித்தறிந்து ரசிக்கத் தெரிவதில்லை. இந்த குறை பல நாட்களாகவே எனக்குண்டு. மக்கா பாடலும் ஆண்டிப்பட்டி பாடலும் முதல் தரம்.
அழுத்தமான காட்சிகளால் ஆங்காங்கே துக்கம் தொண்டை. கண்களில் நீர் தளும்பல். ஓவர் சென்டிமென்ட்டான ஆளாய், நான் மாறி விட்டதை உறுதிப்படுத்தியது.

0 comments:

Post a Comment