Monday, October 27, 2014

கத்தி - விமர்சனம்

கத்தி படத்தை விமர்சிப்பதற்கு முன் அதன் இயக்குனர் திரு முருகதாஸ் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று கோடிகளில் புரளுவதாக சொல்லப்படும் இவர், மிக சாதாரண குடும்ப பின்னணியில், திருச்சி அருகே துவரங்குருச்சி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். திருச்சியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு பஸ்ஸோ ரயிலோ ஏறியவர். பள்ளி காலங்களிலேயே எழுத்தார்வம் இருந்து, சின்ன சின்ன நகைச்சுவை துணுக்குகள், சிறுகதைகள் எழுதி பத்திரிக்கைகளில் வெளிவந்ததன் ஆர்வம் சினிமாவில் சேரத் தூண்டி சென்னைக்கு அனுப்பியிருக்கிறது. இவருக்கு முழு ஆதரவாய் இருந்தவர் இவரின் அப்பா. ஊரில் சிறிய பாத்திர கடையை நடத்தியவர். சென்னையில் முருகதாஸ் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அவரை தளரவிடாமல் செலவிற்கு மாதா மாதம் பணமும் அனுப்பி ஆதரித்தவர். கூட பிறந்த மூன்று அக்காக்கள், மற்றும் இரண்டு தம்பிகளுக்கும் சேர்த்து மாதம் 500 ரூபாய் செலவழிக்கிறார் என்றால் முருதாசிற்கு மட்டுமே மாதம் 400 ரூபாய் அனுப்புவாராம்.
எப்படியோ கஷ்டப்பட்டு பிரபல கதை, திரைக்கதை, வசனகர்த்தாவான P கலைமணியிடம் உதவியாளராய் சேர்ந்திருக்கிறார். நோட்ஸ் எடுக்கும் வேலை மட்டுமல்லாமல்,. கதை டிஸ்கஷனிற்கு வரும் பெரிய பெரிய இயக்குனர்களுக்கு, உற்சாகப் பானங்களை பரிமாறும் வேலையும். இங்கு தான் ஒரு கமெர்சியல் சினிமாவிற்குண்டான  அத்தனை வித்தைகளையும் கற்று கொண்டதாக சொல்கிறார்.
பின்னாளில் உதவி இயக்குனராய் வளர்ந்து S J சூர்யா மூலம் அஜித்திற்க அறிமுகப்படுத்தப்பட்டு ‘தினா’ இயக்கி, அண்ட தி ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி.
இந்த கதையை எதற்கு சொல்கிறேன் என்றால் கிராமம், விவசாயம், கஷ்டம் என்று அடித்தட்டிலிருந்து வந்த மனிதன் தான் இயக்குனர் என்பதை பதிய.
*****
துப்பாக்கிற்கு முன்னால் முருகதாஸ் கத்தி கதையை விஜயிற்கு சொல்லியிருந்தால், விஜய் அவருக்கு கத்தி படம் பண்ணியிருப்பாரா எனபது சந்தேகம் தான். இப்போது பண்ணியிருக்கிறார் என்றால் அது முழுக்க முழுக்க முருகதாசை நம்பி மட்டுமே.
விவசாயம், விவசாயி என்று படம் முழுக்க பேசுகிறார்கள். கொஞ்சம் விட்டாலும் மெலோ டிராமாவாய் கிளிஷே காட்சிகளாலாலும் நிரம்பி வழியக் கூடிய கதை களம். மீறி நிற்கிறது என்றால் அது விஜய் என்கின்ற மாஸ் ஹீரோவாலும் போரடிக்காமல் காட்சியகப்படுத்திய இயக்குநராலும் தான்.  வேறு எந்த ‘மூத்த குடி’யாலும் பண்ணியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
நாட்டின் தற்போதைய விவசாயத் துறையின் நிலைமை பற்றிய மிக மிக அடிப்படை அறிவு இருந்தாலே போதும் இந்த படத்தை பாராட்ட, மட்டுமல்லாமல் ரசிக்கத்தான் சமந்தா, சதீஷ், செல்பி  பாடல்கள் இருக்கிறதே. போதாதா. Its a Shit Movie – என்று விமர்சித்திருந்தார்கள். அந்த Shit-ம் விவசாயத்திற்கு பயன்படக் கூடிய ஒன்று தானே என்று தான் நினைவிற்கு வருகிறதே  தவிர அவர்கள் மீது கோபம் வரவில்லை.
மிகசமீபத்தில் M R ராதா அவர்களின் ஒரு சிறு ஒளி துணுக்கை பகிர்வில் காணக்கிடைத்தது. அதில் ராதா,  “ஏண்டா, இப்ப நாட்ல நல்லது சொல்றதுக்கே ஆள் இல்லாம போய்கிட்டிருக்கு, சொல்றவனை பிடிச்சு, “நீ, என்ன பெரிய ஒழுங்கான்னு கேக்குறீங்க..”. “சொல்ற விஷயம் நல்லா விஷயமா, ஏத்துக்கலாமான்னு மட்டும் பாருங்கடா.. அவன் நல்லவனா, கெட்டவனான்னு ஆராய்ச்சி  பண்ணாதீங்கடா”  – என்கிறார். அது அப்போதைக்கு அவர் மீதான விமர்சனத்தையும் படத்தில் அவர் சொல்கிற கருத்தையும் ஒப்பிட்டு எதிர்ப்பவர்களுக்காக வைக்கப்பட்ட காட்சி போல. இன்றைக்கும்,  இன்றைக்கும் என்ன என்றைக்கும் அது பொருந்தும்.
நேற்றைய காஃபி வித் டிடி யில் முருகதாஸ் சொல்கிறார், கேமரா டிஸ்டன்சை கிரகித்து அதற்கேத்த ஆக்ஷன் மட்டுமே கொடுப்பார் – விஜய் என்று. மேலும் ஒரு குறிப்பிட்ட காட்சியை,  சுற்றி எட்டு கேமரா வைத்து எடுத்தாலும் அந்த எட்டு காமேராவிலும் ஒரே மாதிரியான பாடி லாங்குவேஜ் தான் பதிவாயிருக்கும். சிலருக்கு கை பொசிஷனோ, தலை பொசிஷனோ மாறி விடும். இதை விட ஒரு நடிகருக்கு என்ன பாராட்டு வேண்டும் ஒரு பெரும் இயக்குனரிடமிருந்து. (எப்படி மாறும்…?  நடிச்சா  தானே மாறும் – என்று கம்மென்டில் வந்தால் – சிவாஜி ரத்தம் கக்குற போட்டோ  பரிசளிக்கப்படும்.) :-)
முருகு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் அப்பாவின் டெத் செர்டிஃ பிகேட் வாங்குதற்கு போயிருந்தாராம். (முதல் படம் ரிலீஸ் முன்பே அப்பா இறந்திருக்கிறார்) அங்குள்ள பியூன் லஞ்சம் எதிர்ப்பார்த்திருக்கிறார். இவர் “ஏங்க, இதை வச்சு நான் வேலையா வாங்க போறேன்”. என்று சண்டையிட்டு பார்த்திருக்கிறார். “வேணும்னா காசு கொடு, இல்லாட்டி பத்து நாள் கழிச்சி வா” என்றிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் காசு கொடுத்து வாங்கியிருக்கிறார். அப்போ என்னால பண்ண முடியாதத நான் பண்ணனும் நினச்சத இப்போ என்னோட ஹீரோக்களை வைத்து பண்ணுகிறேன்” – என்கிறார். யதார்த்தத்தை யதார்த்த சினிமாக்களை விடுங்கள். தான் பண்ண முடியாததை ஒரு ஹீரோ திரையில் பண்ணுவதை பார்த்து ரசிகன் புளகாங்கிதம் அடைவது தானே சினிமா !
 கார்ப்ரேட் நிறுவனங்களை நேர் மறையாய் தாக்கும் கதையை ஒரு கார்ப்ரேட் நிறுவனமே தயாரிக்க முன் வருகிறது என்றால் அது முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கையால் தானே. இந்தாளு எப்படியும் சம்பாதிச்சு கொடுத்துருவான் என்பதால் தானே. படம் சொல்ல வந்த கருத்தை லைக்கா என்ன, கோத்த பய ராஜ பக்க்ஷ தயாரித்தால் கூட ஏற்று கொள்ளலாம் தான்.
இடைவேளையில் என்னுடைய பிரத்யோக விருப்பமான பவோண்டோவை தேடினேன். கிடைக்கலை. ஒரு வேளை அவர்கள் மார்க்கெடிங்கை இன்னும் விஸ்தாரப்படுத்தினால் கிடைக்கலாம். இங்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த உள்ளூர் சரக்கு தயாரிக்கவும் பெப்சி, கோக் தயாரிக்க உபயோகிக்கப்படும் அதே அளவு தண்ணீர் தானே தேவைப்படும் ?அப்படியென்றால் அவர்களை மட்டுமல்ல இவர்களையும் தானே எதிர்க்க வேண்டும்.
 படம் ‘விவசாயிகளுக்கு சமர்ப்பணம்’ என்று கார்டு போட்டு முடித்தார்கள். திருப்தியாய் ஒரு படம் பார்த்து முடித்த ஒரு உணர்வு. மனதிற்குள்ளேயே கை தட்டி கொண்டேன். ஒரு வேளை தரை டிக்கெட்டில் இருந்திருந்தால் சத்தமாய் தட்டியிருப்பேனோ என்னவோ….

0 comments:

Post a Comment