Friday, January 6, 2017

#துருவங்கள்16 #D16 (நோ ஸ்பாய்லர்ஸ்)




படத்தை முதல் காட்சியிலிருந்து தவற விடாமல் பார்க்க வேண்டும் என்றே நாலாப்பக்கமும் அறிவுறுத்தி இருந்தார்கள். ஒருவேளை அதை தவிர்த்து, டைட்டில் போடும் காட்சியில் சென்றிருந்தால் எனக்குள் ஏற்றப்பட்ட மண்டை குழப்பம்  சிறிது தவிர்க்கப்பட்டிருக்கும். அது நம்மை குழப்புவதற்காக இயக்குனர் கடைபிடித்த உத்தி என்ற போதிலும், அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. என்ன தான் அதை பிற்பாடு நியாயம் செய்திருந்தாலும் ஏதோ ஏமாற்றப்பட்ட ஒரு உணர்வு.

படத்திற்கு பெரும் பலம் ரகுமானின் அசாதாரண நடிப்பு. மல்டி டாஸ்கிங் செய்து கொண்டே பெரும்பாலும் பேசி நடிப்பது சிறப்பு. அதை படம் முழுக்க மெயின்டெயின் செய்ய வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
கார் ஆக்சிடென்ட் செய்யும் அந்த மூன்று இளைஞர்களின் முகங்களை நம்முள் பதிய செய்த அளவிற்கு, அந்த பக்கத்தில் நடக்கும் க்ரிஷ், அவரின் நண்பர் மற்றும் ராஜிவ் முகங்களை பதிய செய்யாததும் திட்டமிடப்பட்டு நம்மை குழப்புவதற்காக தான். அது தேவையில்லாத ஒன்று. தெளிவாகவே காட்டியிருக்கலாம். எல்லா சென்டர் ரசிகர்களும் படம் பார்க்க வேண்டும். இந்த எண்ணம் இயக்குனருக்கு இல்லையோ என்ற சந்தேகம் வலுப்பெறுவது - நேரத்துடன் இடங்களின் பெயர்களை போடும் போது - அவைகள் ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்படும் போது.
இயக்குனர் ஒரு பேட்டியில், "இப்ப உள்ள ஆடியன்ஸ்லா செம புத்திசாலிங்களா இருக்காங்க.. .". அந்த டார்கெட்டில் படம் எடுத்ததால் தான் நமக்கு இப்படி ஒரு படம் கிடைத்திருக்கிறது. ஆனால் ஆங்கிலம் தெரியாத புத்திசாலிகளும் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
படத்தில் சில லாஜிக்கலான கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அது ஸ்பாய்லர்ஸ். நண்பர் Subas Sunder அதை லிஸ்ட் செய்து இருக்கிறார். வேண்டுமென்றால் அவர் பதிவில் படித்துக் கொள்ளலாம்.
இவையெல்லாவற்றையும் நீங்கள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தோன்றாது. முடித்து வெளியே வரும் போது தான் கேள்விகள் முளைக்கும். அது தான் இயக்குனரின் சாமர்த்தியம். திரில்லர் டைப் படங்களுக்கு படம் முடிந்த பிறகு தானே கேள்விகள் முளைக்கும்? என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கறது.
ஹீரோயின் - சண்டைக்காட்சிகள் - பாடல்கள் - (கிளைமாக்ஸில் மட்டும் ஒரு பாட்டு) இல்லாமல், அந்த பக்கம் இந்த பக்கம் நகர விடாமல், ஆணியடித்தார் போல் உட்கார வைத்து படம் காண்பிப்பது லேசுப்பட்ட விஷயம் அல்ல.
குறும்படம் எடுக்கும் இளைஞர்களில் ஒருவராய் இயக்குனர் கார்த்தி நரேனும் தலைகாட்டிருக்கிறார்.
கடைசியாய் முளைத்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டு உரையை முடித்துக் கொள்கிறேன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட ஒரு ஆளிற்கு தாடி முளைக்குமா ?

தியேட்டார்  டிட் பிட்ஸ் : 

காட்சி தொடங்குவதற்கு முன்னரே சென்றதால் கவனிக்க முடிந்தது. பின்னிருக்கை வரிசையில் குறைந்தபட்சம் பத்து நபர்களையாவது அடங்கிய ஒரே குடும்பம். அதில் எல்லா வயது ரக ஆட்களும் இருந்தார்கள். ஐந்து, ஒன்பது, பதினாறு வயது தொடங்கி அறுபது சொச்ச வயது வரையிலான பாட்டி வரை கூட்டிக் கொண்டு வந்த குடும்பத் தலைவரின் மீது அளப்பரிய மரியாதை வந்தது.
அதே சமயத்தில் இவர்களால் படத்தை கூர் நோக்கும் பயணம் தடை படுமோ என்ற அச்சமும் கவ்வியது. படம் தொடங்குவதற்கு முன், கு. தலைவர்..."இப்ப.. ஜன கன மன.. போடுவாங்க... எல்லாரும் எந்திருச்சு நிக்கணும்.. அப்படி நிக்கலன்னா.. மூணு வருஷம் ஜெயில்...இதுவரைக்கும் ஏழு பேரை பிடிச்சி போட்டுறாங்க..." என்கின்ற வாட்ஸ் அப் தகவலினை தன் குடும்பத்தினருக்கும் சுற்றி உட்கார்ந்திருக்கும் மக்களுக்கும் பகிர்ந்து பயமுறுத்தி கொண்டிருந்தார்.
படம் தொடங்கியது. நான் பயந்த அளவு இல்லை. சுமூகமாகவே சென்றது.
இடைவேளை முடிந்து, சில ட்ரைலர்களுக்கு முடிவாய், ஜி.வி.ப்ராகாஷின் 'புரூஸ் லீ' படத்தின் முன்னோட்டம் ஒளிபரப்பப்பட்டது. ட்ரைலரின் ஒவ்வொரு காட்சிற்கும் அப்படி விழுந்து விழுந்து சிரித்தார்கள், மொத்தக் குடும்பமும்.
நாம் தமிழர்களின் நகைச்சுவை வறட்சியும் ஜல்லிக்கட்டு புரட்சியும் ஒரு சேர நினைவிற்கு வந்து போனது.

0 comments:

Post a Comment