Friday, January 23, 2015

அவினாஷ் டைம்ஸ்

ரொம்ப நாளாகவே வீட்டம்மணி சொல்லிட்டு இருக்காங்க, பையனை கூட்டிப்போய் காது டெஸ்ட் எடுக்கணும்னு. கூப்பிடும் போது சரியாய் respond பண்ணுவதில்லை என்பது தான் காரணம். அவன் டிவி பார்க்கும் சமயங்களில் அம்மாதிரி இருப்பதை நானும் கவனித்திருக்கிறேன். கவனம் முழுவதும் ஒரே விஷயத்திலேயே இருப்பதால் அவ்வாறு இருக்கலாம் என்று நான் தட்டிக் கழித்தே வந்தேன். இன்றைக்கு சட்டை மற்றும் டிரௌசரை பிடித்தே கேட்டு விட்டார்கள். கூப்பிட்டு போக முடியுமா ? முடியாதா ? என்று.
ஒரு வெப்சைட் இருக்கிறது. வெவ்வேறு டெசிபல்களில் ஒலியை ஒலிக்க விட்டு ஹெட் போன் மாட்டி நம் காதுகளில் ஒலி திறனை சுயமாய் பரிசோதனை செய்து கொள்ளலாம். அந்த வெப்சைட் தேடி எடுப்பதற்கு முன் physical டெஸ்ட் ஒன்றை நாமே எடுக்கலாமே என்று களத்தில் இறங்கினேன்.
ஹாலில் ஒரு இறுதியில் நானும் அவனும் ஒருவருக்கு ஒருவர் முதுகு காட்டியவாறு நின்று கொண்டோம். அவனை அங்கேயே நிறுத்தி இருக்கச் சொல்லி, நான் இரண்டடி முன் நகர்ந்து, குரலை ஒரே டெசிபலில் இருக்கிற மாதிரி வைத்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன். 
"அவினாஷ், உன் பெயர் என்ன ?" smile emoticon
"என்னப்பா...நீங்களே answer சொல்றீங்க...'R P அவினாஷ்' ப்பா..
மேலும் இரண்டடி முன் நகர்ந்து....
"என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிறீங்க..,."
"II B"
மறுபடியும் இரண்டடி முன் நகர்ந்து....
"ஸ்கூலுக்கு எதில போவீங்க ...."
"போகும் போது பைக்ல.. உங்க கூட, வரும் போது ஆட்டோல..."
இரண்டடி முன்...
"அப்பா, என்ன பைக் வச்சிருக்காரு..."
"சுசுகி 150"
"வெரி குட்"
இரண்டடி....
"அப்பா use பண்ற லேப்டாப் என்ன கம்பெனி ....?"
"சோனி ப்பா ..."
"வெரி குட்"
இரண்டடி....
"தாத்தா பேரு என்ன....?
"ஜீவன் ராம்"
இரண்டடி....
"பாட்டி பேரு....?
"சரோஜாம்மாள்..."
இரண்டடி....
"சரி... அப்பா use பண்ற மொபைல் என்ன கம்பெனி ....?"
சொன்னான்...
எனக்குத் தான் கேட்கவில்லை.....

Sunday, January 18, 2015

ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா.. டால்பி டிஜிட்டல் சன்னாட்டா..


dhanu SHAMITABH bachchan (ஷமிதாப்) படத்தில் தனுஷ் நடிகர். படத்தில் அவருக்கு குரல் கொடுப்பவராக (Dubbing Artist) அமிதாப். தனுஷ் பிரபலமாவது அவரின் நடிப்பாலா ? இல்லை அமிதாபின் குரலாலா ? என்று இருவருக்குமிடையே ஏற்படும் மோதல் தான் கதை.

எண்பதுகளில் டாப்பில் இருந்த மைக் மோகன் மற்றும் அவருக்கு 80 படங்களுக்கு மேல் குரல் பின்னணி கொடுத்த SN சுரேந்தரின் கூட்டணியிலிருந்து இந்த கதை இன்ஸ்பயர் ஆகியிருக்கலாம் என்று ஒரு info.

யு ட்யூபில் படத்தின் ட்ரைலரை பார்த்தும் & இளையராஜா இசையில் பாடல்களையும் கேட்டு களிக்கலாம். நம்ம சுருதி ஒரு பாட்டு பாடியிருக்காங்க. 'ஆசைய காத்துல' பாட்டோட டிஜிட்டல் வெர்ஷன். அப்படியே குழையுறாங்க...கிறங்குறாங்க... நம்ம கண்ணு முன்னாடி வந்து நின்னு சிரிச்ச மேனி பாடி... நெஞ்சை அள்ளுறாங்க


ஸ்டீரியோபோனிக் சன்னாட்டா.. 
டால்பி டிஜிட்டல் சன்னாட்டா..


பாடும் போது ஸ்ருதிஹாசனுக்கு இருக்கும் storming and sexy வாய்ஸ் ஏன் பேசும் போது மட்டும் நாலு கல்யாணம் பண்ண லக்ஷ்மியோட பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி இருக்குன்னு தெரியல.

"போற்றி பாடாடி" பாடலுக்கு அப்புறம் ஸ்ருதிஹாசன் ராஜாவின் இசையில் பாடும் பாடல் இது. வாட் எ சேன்ஜ் ஒவர் மாமா !

ஏற்கனவே ஸ்ருதி Tevar ஹிந்தி படத்துல பாடின Joganiyan பாட்டு செம ஹிட்டு. இப்போ இது. இந்நேரம் வட இந்தியாவில் வைரலாய் பரவிக் கொண்டிருக்கும் Sannata பாடலின் வெற்றிக்குபின் ராஜாவின் இசையை தவிர்த்து, ஸ்ருதியில் குரலை தவிர்த்து முக்கிய பங்காய் இருப்பது/இருக்கப் போவது அதன் லிரிக்ஸ்-ம் தான்.

Sannata என்றால் calm / lull என்று அர்த்தமாம். சரியாய் சொல்ல வேண்டுமெனில் 'புயலுக்கு பின் வரும் அமைதி' இருக்கிறதே...அது தான் Sannata....மயான அமைதி !


இப்போது பாடல் வரிகளை கவனியுங்கள்....

Stereophonic sannata, dolby digital sannata
Stereophonic sannata, dolby digital sannata
Listen to the sound of sannata,
Sun sun sannata
Common let’s do the sannata
Sun sun sannata
Common let’s do the sannata
Stereophonic sannata, dolby digital sannata
Stereophonic sannata, dolby digital sannata

Why Gulzar, why Javed,
Why **, Why Joshi
Why Irshad, why Amitabh
Bye Bye **, Bye **
Muhn khole bina, mukhde mein hai kya
Kuch bole bina, bolon mein hai kya
Download ringtone, FM, CD
Viral jayega, sannata
Revenue, royalties, copyright,
Not be the big ones are in sannata
Stereophonic sannata, dolby digital sannata

Why Sonu, why Sunidhi
Bye Bye Shreya or Bye Shruti
Need no Shaan, no Shilpa
Need no Yo Yo Honey Singh
Chup nayak hai toh gayak kya
Speaker band hai, toh singer kya
Playback, item, sufi, duet
Top the bazaar is sannata
Pop pop, jazz, blues, cd, and remix
The mother of them all is sannata
Stereophonic sannata, dolby digital sannata
Stereophonic sannata, dolby digital sannata
Listen to the sound of sannata,
Sun sun sannata
Common let’s do the sannata
Sun sun sannata
Common let’s do the sannata
Stereophonic sannata, dolby digital sannata

Luv Shruti....

Saturday, December 27, 2014

கயல் (2014 - தமிழ்)


படத்தில்  இரண்டே வகையான கேரக்டர்கள். ஒன்று நல்லவர்கள். இரண்டு மிக மிக நல்லவர்கள். இந்த மாதிரி கேரக்டர்களை முன்பு விக்ரமன் படங்களில் பார்க்கலாம். இப்போது பிரபு சலோமன். அந்த மாதிரி கயல் படத்திலும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மேற்கண்ட இரண்டு வகைகளிலே இருக்கிறார்கள். காலம் காலமாக தமிழ் சினிமாக்களில் வில்லன்களாகவே சித்தரிக்கப்படும் லாரி டிரைவரை நல்லவனாக சித்தரித்து அந்த சம்பிரதாயத்தை கட்டுடைத்து இருக்கிறார்.
படம் முதல் பாதியில் நன்றாய் தான் செல்கிறது. கதையும் அது பயணிக்கும் களனும் கதாபாத்திரங்களும்.. மிக மிக எதார்த்தமாய் தான் காட்சிகள் நகர்கிறது. நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புத்தம் புது முகங்கள். ஏனோ தெரியவில்லை, எங்கே எங்கேயாவது குபீரென தம்பி ராமையா வந்து விடுவாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
ஆறு மாசம் சம்பாதிங்க….ஆறு மாசம் அதை ஜாலியா செலவு பண்ணுங்க…. அதுவும் ஊர் ஊராய் சுற்றி… மாதிரி மெசேஜ் சொல்கிறார்கள். கேக்குறதுக்கே செம சூப்பரா இருக்குல்ல. ஹீரோவும் அவரின் நண்பரும் அந்த மாதிரி தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சுற்றும் போது ஒரு ஊரில் ஓடிப் போகும் காதலர்களுக்கு எதேச்சையாக உதவி செய்ய நேரிடுகிறது.. ஓடி போனவர்களின் நண்பர்கள் இவர்கள் என நினைத்து… பிடித்து வைத்து அடித்து உதைத்து விசாரிக்கிறார்கள்… ஓடி போன பெண்ணின் ஊர் பெரிய மனிதரின் வீட்டில். அங்கு வேலை செய்யும் பெண்ணாக கயலை சந்திக்கிறான் நாயகன். கண்டவுடன் காதல் கொள்கிறான். “உள்ள பூந்து கொடாயுது” என்றெல்லாம் வசனம் பேசுகிறார். ஹீரோ பேசிய காதல் வசனங்களை வீட்டில் வேலை பார்க்கும் மற்ற இரு ஜோடிகளை.. ஹீரோ பேசிய அதே வசனங்களை பேச வைத்து அதை காமெடியாகவும் சீரியஸ் ஆகவும் உருவாகப்படுத்துவதில் இயக்குனர் நிற்கிறார். அந்த மாதிரி ஆங்கங்கே சிற்சில கதாப்பாத்திரங்கள் காமெடி செய்து நம்மை ரிலாக்ஸ் செய்து படத்தை ரசிக்க செய்து விடுகிறார்கள்.
இடைவேளையின் போது இணையதள விமர்சகர்களை குறித்து ஆழ்ந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. சினிமாக் காரங்க சொல்ற மாதிரி இஷ்டத்துக்கு விமர்சனத்த அவுத்து விட்டு நாஸ்தி பண்றாங்களோ என்று… ஒரு ஸ்டிக் ஐசை வாங்கி சப்பியபடி இரண்டாம் பாதியை எதிர் நோக்கி உட்கார்ந்தேன்.
அவ்ளோ தாங்க.. மேலே சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை. ஹீரோயின் ஹீரோவை தேடிப் போறாங்க… ஹீரோ ஹீரோயினை தேடிப் போகிறார்…. கிளைமாசில பாத்துகுறாங்க. சுனாமி வருது… பிரியுறாங்க..அப்புறமா சேர்ந்துறாங்க.. நாலு வரியில முடிஞ்சு போச்சுல்ல. ஆனா அதை அப்படி இழுத்துருக்காங்க ஒரு மணி நேரத்துக்கும் மேலாக. அப்படித்தான் படம் தொங்கலாகி போய் விடுகிறது.
ஆனா படத்துல மூணு அருமையான மெலடி பாட்டு இருக்குங்க…
படத்தில் நெருடிய ஒரு விஷயம்… இயக்குனர் அவர் மதம் சார்ந்த அடையாளங்களை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். இட்ஸ் ஓகே படத்தின் ஹீரோ அந்த மதத்தை சேர்ந்தவர் அதனால் என்று விட்டு விடலாம். ஆனால் போன படத்தின் (கும்கி) வெற்றி விழாவின் போதே
அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். பொது வெளியில் இயங்குபவர்கள் அவ்வாறு இருப்பதை தவிர்க்கலாம்.

Friday, December 26, 2014

ஹேமா சின்ஹா



ஹேமா சின்ஹா என்னும் இந்த புள்ளையத்தான் நேற்று மனுஷ்யபுத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் யாரோ அசிங்கப்படுத்தியதாக அறிகிறேன். விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவரின் தமிழ் பேசும் உச்சரிப்பை கண்டு அவர் கொதிப்படைந்து “பேசுனது போதும், வேற யாரையாவது பேச சொல்” என்று கத்தியிருக்கிராராம். யார் அவர் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஜோல்னா பை வைத்திருப்பவராகவும், அடர்த்தியான தாடியுடன், தடிமனான கண்ணாடி அணிந்தவராகவும் இருக்கக் கூடும். (கற்றது தமிழ் ஜீவா இல்லை இல்லை கற்றது தமிழ் ராம் ஞாபகத்துக்கு வர்றாங்கல்ல…)
ஒரு காலத்தில் சன் மியூசிக்கில் காம்பயரிங் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெண்கள் அல்ல. தேவதைகள். அப்படியாப்பட்ட தேவதை சந்ததியரின் கடைசி தலைமுறையை சேர்ந்தவர் தான் இந்த ஹேமா சின்ஹா.
பக்க பக்கமாய் இலக்கியம் படித்தது இருக்கட்டும். உனக்கு கொடுத்து அனுப்பிச்ச இன்விடேஷனை ஒழுங்கா படிச்சியா? சின்ஹா பெயரை பார்க்கும் போதே தெரிய வேணா…இந்தளவிற்கு தமிழ் பேசுவதே பெரிய விஷயம். வாசிப்பு எதை எதையோ கற்றுக் கொடுக்கும் என்கிறார்களே. உனக்கு அது ஒரு அடிப்படை நாகரிகத்தை, கொஞ்சூண்டு சகிப்புத் தன்மையுமா கற்றுக் கொடுக்கவில்லை.
பாவம் அந்தப் பெண், கண் கலங்கியவாறு விழா முடியும் வரை பின்னாலேயே நின்று கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் எப்படி இருந்திருக்கும் அவரின் மனநிலை.
இந்த மாதிரி தான் சமீபத்தில் கோவாவில் நடந்த பட விழாவில் DD சேனலை சேர்ந்த ஒரு பெண் காம்பியர் தப்பாய் ஒருவரின் பெயரை ரேப்ரசென்ட் பண்ணி விட்டார். அவரை சோசியல் மீடியாவில் ஒட்டு ஓட்டுவென ஒட்டியிருக்கிறார்கள். நாம் லிங்குவை ஒட்டின மாதிரி. அவர் தற்கொலை செய்யும் மனநிலை வரை சென்று விட்டாராம்.
இதெல்லாம் பாவம் மை சன்ஸ் !

Monday, October 27, 2014

கத்தி - விமர்சனம்

கத்தி படத்தை விமர்சிப்பதற்கு முன் அதன் இயக்குனர் திரு முருகதாஸ் அவர்களை பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று கோடிகளில் புரளுவதாக சொல்லப்படும் இவர், மிக சாதாரண குடும்ப பின்னணியில், திருச்சி அருகே துவரங்குருச்சி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். திருச்சியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு பஸ்ஸோ ரயிலோ ஏறியவர். பள்ளி காலங்களிலேயே எழுத்தார்வம் இருந்து, சின்ன சின்ன நகைச்சுவை துணுக்குகள், சிறுகதைகள் எழுதி பத்திரிக்கைகளில் வெளிவந்ததன் ஆர்வம் சினிமாவில் சேரத் தூண்டி சென்னைக்கு அனுப்பியிருக்கிறது. இவருக்கு முழு ஆதரவாய் இருந்தவர் இவரின் அப்பா. ஊரில் சிறிய பாத்திர கடையை நடத்தியவர். சென்னையில் முருகதாஸ் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அவரை தளரவிடாமல் செலவிற்கு மாதா மாதம் பணமும் அனுப்பி ஆதரித்தவர். கூட பிறந்த மூன்று அக்காக்கள், மற்றும் இரண்டு தம்பிகளுக்கும் சேர்த்து மாதம் 500 ரூபாய் செலவழிக்கிறார் என்றால் முருதாசிற்கு மட்டுமே மாதம் 400 ரூபாய் அனுப்புவாராம்.
எப்படியோ கஷ்டப்பட்டு பிரபல கதை, திரைக்கதை, வசனகர்த்தாவான P கலைமணியிடம் உதவியாளராய் சேர்ந்திருக்கிறார். நோட்ஸ் எடுக்கும் வேலை மட்டுமல்லாமல்,. கதை டிஸ்கஷனிற்கு வரும் பெரிய பெரிய இயக்குனர்களுக்கு, உற்சாகப் பானங்களை பரிமாறும் வேலையும். இங்கு தான் ஒரு கமெர்சியல் சினிமாவிற்குண்டான  அத்தனை வித்தைகளையும் கற்று கொண்டதாக சொல்கிறார்.
பின்னாளில் உதவி இயக்குனராய் வளர்ந்து S J சூர்யா மூலம் அஜித்திற்க அறிமுகப்படுத்தப்பட்டு ‘தினா’ இயக்கி, அண்ட தி ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி.
இந்த கதையை எதற்கு சொல்கிறேன் என்றால் கிராமம், விவசாயம், கஷ்டம் என்று அடித்தட்டிலிருந்து வந்த மனிதன் தான் இயக்குனர் என்பதை பதிய.
*****
துப்பாக்கிற்கு முன்னால் முருகதாஸ் கத்தி கதையை விஜயிற்கு சொல்லியிருந்தால், விஜய் அவருக்கு கத்தி படம் பண்ணியிருப்பாரா எனபது சந்தேகம் தான். இப்போது பண்ணியிருக்கிறார் என்றால் அது முழுக்க முழுக்க முருகதாசை நம்பி மட்டுமே.
விவசாயம், விவசாயி என்று படம் முழுக்க பேசுகிறார்கள். கொஞ்சம் விட்டாலும் மெலோ டிராமாவாய் கிளிஷே காட்சிகளாலாலும் நிரம்பி வழியக் கூடிய கதை களம். மீறி நிற்கிறது என்றால் அது விஜய் என்கின்ற மாஸ் ஹீரோவாலும் போரடிக்காமல் காட்சியகப்படுத்திய இயக்குநராலும் தான்.  வேறு எந்த ‘மூத்த குடி’யாலும் பண்ணியிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
நாட்டின் தற்போதைய விவசாயத் துறையின் நிலைமை பற்றிய மிக மிக அடிப்படை அறிவு இருந்தாலே போதும் இந்த படத்தை பாராட்ட, மட்டுமல்லாமல் ரசிக்கத்தான் சமந்தா, சதீஷ், செல்பி  பாடல்கள் இருக்கிறதே. போதாதா. Its a Shit Movie – என்று விமர்சித்திருந்தார்கள். அந்த Shit-ம் விவசாயத்திற்கு பயன்படக் கூடிய ஒன்று தானே என்று தான் நினைவிற்கு வருகிறதே  தவிர அவர்கள் மீது கோபம் வரவில்லை.
மிகசமீபத்தில் M R ராதா அவர்களின் ஒரு சிறு ஒளி துணுக்கை பகிர்வில் காணக்கிடைத்தது. அதில் ராதா,  “ஏண்டா, இப்ப நாட்ல நல்லது சொல்றதுக்கே ஆள் இல்லாம போய்கிட்டிருக்கு, சொல்றவனை பிடிச்சு, “நீ, என்ன பெரிய ஒழுங்கான்னு கேக்குறீங்க..”. “சொல்ற விஷயம் நல்லா விஷயமா, ஏத்துக்கலாமான்னு மட்டும் பாருங்கடா.. அவன் நல்லவனா, கெட்டவனான்னு ஆராய்ச்சி  பண்ணாதீங்கடா”  – என்கிறார். அது அப்போதைக்கு அவர் மீதான விமர்சனத்தையும் படத்தில் அவர் சொல்கிற கருத்தையும் ஒப்பிட்டு எதிர்ப்பவர்களுக்காக வைக்கப்பட்ட காட்சி போல. இன்றைக்கும்,  இன்றைக்கும் என்ன என்றைக்கும் அது பொருந்தும்.
நேற்றைய காஃபி வித் டிடி யில் முருகதாஸ் சொல்கிறார், கேமரா டிஸ்டன்சை கிரகித்து அதற்கேத்த ஆக்ஷன் மட்டுமே கொடுப்பார் – விஜய் என்று. மேலும் ஒரு குறிப்பிட்ட காட்சியை,  சுற்றி எட்டு கேமரா வைத்து எடுத்தாலும் அந்த எட்டு காமேராவிலும் ஒரே மாதிரியான பாடி லாங்குவேஜ் தான் பதிவாயிருக்கும். சிலருக்கு கை பொசிஷனோ, தலை பொசிஷனோ மாறி விடும். இதை விட ஒரு நடிகருக்கு என்ன பாராட்டு வேண்டும் ஒரு பெரும் இயக்குனரிடமிருந்து. (எப்படி மாறும்…?  நடிச்சா  தானே மாறும் – என்று கம்மென்டில் வந்தால் – சிவாஜி ரத்தம் கக்குற போட்டோ  பரிசளிக்கப்படும்.) :-)
முருகு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் அப்பாவின் டெத் செர்டிஃ பிகேட் வாங்குதற்கு போயிருந்தாராம். (முதல் படம் ரிலீஸ் முன்பே அப்பா இறந்திருக்கிறார்) அங்குள்ள பியூன் லஞ்சம் எதிர்ப்பார்த்திருக்கிறார். இவர் “ஏங்க, இதை வச்சு நான் வேலையா வாங்க போறேன்”. என்று சண்டையிட்டு பார்த்திருக்கிறார். “வேணும்னா காசு கொடு, இல்லாட்டி பத்து நாள் கழிச்சி வா” என்றிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் காசு கொடுத்து வாங்கியிருக்கிறார். அப்போ என்னால பண்ண முடியாதத நான் பண்ணனும் நினச்சத இப்போ என்னோட ஹீரோக்களை வைத்து பண்ணுகிறேன்” – என்கிறார். யதார்த்தத்தை யதார்த்த சினிமாக்களை விடுங்கள். தான் பண்ண முடியாததை ஒரு ஹீரோ திரையில் பண்ணுவதை பார்த்து ரசிகன் புளகாங்கிதம் அடைவது தானே சினிமா !
 கார்ப்ரேட் நிறுவனங்களை நேர் மறையாய் தாக்கும் கதையை ஒரு கார்ப்ரேட் நிறுவனமே தயாரிக்க முன் வருகிறது என்றால் அது முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கையால் தானே. இந்தாளு எப்படியும் சம்பாதிச்சு கொடுத்துருவான் என்பதால் தானே. படம் சொல்ல வந்த கருத்தை லைக்கா என்ன, கோத்த பய ராஜ பக்க்ஷ தயாரித்தால் கூட ஏற்று கொள்ளலாம் தான்.
இடைவேளையில் என்னுடைய பிரத்யோக விருப்பமான பவோண்டோவை தேடினேன். கிடைக்கலை. ஒரு வேளை அவர்கள் மார்க்கெடிங்கை இன்னும் விஸ்தாரப்படுத்தினால் கிடைக்கலாம். இங்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த உள்ளூர் சரக்கு தயாரிக்கவும் பெப்சி, கோக் தயாரிக்க உபயோகிக்கப்படும் அதே அளவு தண்ணீர் தானே தேவைப்படும் ?அப்படியென்றால் அவர்களை மட்டுமல்ல இவர்களையும் தானே எதிர்க்க வேண்டும்.
 படம் ‘விவசாயிகளுக்கு சமர்ப்பணம்’ என்று கார்டு போட்டு முடித்தார்கள். திருப்தியாய் ஒரு படம் பார்த்து முடித்த ஒரு உணர்வு. மனதிற்குள்ளேயே கை தட்டி கொண்டேன். ஒரு வேளை தரை டிக்கெட்டில் இருந்திருந்தால் சத்தமாய் தட்டியிருப்பேனோ என்னவோ….

Saturday, October 18, 2014

வரும்…,ஆனா வராது…..


தமிழ் ஹிந்து வந்து ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. ஊர் ஊராய் சென்று வாசகர்களுடன், பிரபலங்களுடன் கொண்டாடி வருகிறார்கள். மெச்சத் தகுந்த நல்ல பல கட்டுரைகளுடன் ஒரு மதிப்பான செய்தி செய்தித்தாளாய் உருமாறி வருகிறது என்றே சொல்லலாம். நிற்க.
மூன்று மாதத்திற்கு முன் நானும் ஆறு மாத சந்தா கட்டி அதில் ஐக்கியமானேன். மூன்று மாதம் வரை ஒழுங்காய் தான் விநியோகித்து வந்தார்கள். கடந்த மூன்று நாட்களாய் பேப்பர் வருவதில்லை. காரணம் கேட்டதற்கு “நீங்கள் மூன்று மாத சந்தா தான் கட்டியிருப்பீர்கள், அதனால் நிப்பாட்டி இருப்பார்கள்” என்றார் லோக்கல் பாயிண்ட் டெலிவரி ஏஜென்ட். உடனே தமிழ் ஹிந்து அலுவலகத்திற்கு தகவல் கொண்டு விசாரித்ததில், “இல்லை உங்களுக்கு ஆறு மாதம் வரை டெலிவரி உண்டு, நீங்கள் லோக்கல் விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளுங்கள்” என்று (டேக் டைவெர்சன்) திருப்பி விட்டார்கள். தமிழ் ஹிந்து அலுவலகத்தில் இந்த பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவு எளிதாய் கிடைத்து விடவில்லை. அரை நாள் ஆகி விட்டது. ஒன்று லைனே கிடைக்காது. லைன் கிடைத்தால் ஹோல்டில் போடுவார்கள், பின்பு ட்ரான்ஸ்பர் செய்கிறேன் என்று சுத்தலில் விடுவார்கள். ஒரு கட்டத்தில் வெறுத்து, நாமே தொடர்பை துண்டிக்க வைக்க வேண்டும் என்பது தான் அவர்களுக்கு Management ட்ரைனிங்கில் சொல்லியிருப்பார்கள் போல. ஆச்சா…
இப்போது லோக்கல் விநியோகஸ்தர் முறை. அவருக்கு கால் செய்தால் “கண்ணா, பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..” என்று அவரின் ரிங் டோனை எனக்கு மனனம் செய்ய வைத்தாரே தவிர போன் எடுக்கப்படவேயில்லை. “பேப்பர் இன்னைக்கு வரும், நாளைக்கு வராது” என்பதன் குறியீடு போல அது.
அடுத்த என்ன.., மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தேன். காசோலை வாங்கி கொண்டு போன ஹிந்து பிரதிநிதி, பிறகு லோக்கல் பாயிண்ட் டெலிவரி ஏஜென்ட், மறுபடியும் ஹிந்து அலுவலகம் என்று காலை டிபன் சாப்பிட்டு உட்கார்ந்தால் மதியம் சாப்பாட்டிற்கு தான் எழுந்திருக்க முடியும்.
இன்று மூன்றாம் நாள், கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டு, நானும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி, ஒரு மாதிரி மன உளச்சலை உண்டாக்கி கத்த விட்டு விட்டார்கள். ஆனால் அவர்களில் யாருமே டென்ஷனே ஆகவில்லை. காதில் போட்டால் தானே, இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவது.
எப்போதும் போல இன்றைக்கும் சொல்லியிருக்கிறார்கள், “நாளைக்கு டெலிவரி ஆகிவிடும், ஐயா”. என்று.
இதனால் உளவியல் ரீதியாக எவ்வளவு பதற்றத்தை உண்டாக்குகிறார்கள் பாருங்கள். என்னிடம் பேசிய இத்தனை பேர்களில் யாரிடமுமே உணர்வு என்பதே இல்லையோ என்றே ஐயம் வருகிறது, இல்லை அவைகள் மரக்கடிக்கப்பட்டு விட்டவனைகளா..
ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டன். இதில் ‘மக்கள் குரல்’ என்று ஒரு பகுதி வருகிறது. ஊரில் உள்ள பிரச்சனைகளை நாம் தொலைபேசியில் பதிந்தால், அதற்குண்டான நடவடிக்கை உடனடியாய் எடுக்கப்பட்டு, தீர்வு கிடைத்தவுடன் பெருமையாய் பதிவார்கள்.

Tuesday, October 14, 2014

இளையராஜாவின் பதில் கடிதம்

1978 லேயே இளையராஜாவிடம் ஓரண்டை இழுத்திருக்கிறார் ஒரு ரசிகர். அப்போது ராஜா கைப்பட எழுதிய கடிதம். தரவிறக்கி ஜூம் செய்தால் தெளிவாய் படிக்கலாம். பிரபலங்கள் என்றாலே இப்படியாகப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து, கடந்து வந்து தான் பக்குவப்பட வேண்டியிருக்கும் போல.